சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன - ஓ. பன்னீர் செல்வம் கண்டனம்
திட்டப் பணிகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டிற்குள், சென்னையில் உள்ள குடியிருப்புகளுக்கான சொத்து வரியை 150 விழுக்காடு வரையிலும், தொழிற்சாலைகள் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான சொத்து வரியை 100 விழுக்காடு வரையிலும், வணிக நிறுவனங்களுக்கான சொத்து வரியை 150 விழுக்காடு வரையிலும் உயர்த்தி மக்களை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தியது. சொத்து வரி உயர்விற்கு ஏற்ப குடிநீர் வரியும் உயர்த்தப்பட்டது. இந்த அளவுக்கு சொத்து வரியை உயர்த்தியும், சென்னை மாநகராட்சி நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்றால் அதற்குக் காரணம் தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையே.
சென்னை மாநகராட்சிக்கு அதிக வருவாயை ஈட்டித் தருவது சொத்து வரி. சொத்து வரி உயர்வு மூலம் மட்டும் கிட்டத்தட்ட 1,700 கோடி ரூபாய் சென்னை மாநகராட்சிக்கு வந்துள்ளது. இருந்தபோதிலும், நுங்கம்பாக்கத்தில் உள்ள காதர் நவாஸ் கான் ரோடு, ராயபுரத்தில் உள்ள எம்.ஜி. ரோடு என பல முக்கியத் திட்டங்கள் முடங்கிப் போயுள்ளதாகவும், நிதி இல்லாமலேயே சென்னை மாநகராட்சி ஒப்பந்தப் புள்ளிகளை கோருவதாகவும், முடிக்கப்பட்ட திட்டங்களுக்கான 300 கோடி ரூபாய் நிதியை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கவில்லை என்றும், முடிக்கப்பட்ட சாலைகளுக்கான 500 கோடி ரூபாய் நிதி இன்னமும் வழங்கப்படவில்லை என்றும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சிங்கார சென்னை என்று சொல்லி சீரழிந்த சென்னை என்ற நிலைக்கு சென்னையை தி.மு.க. அரசு அழைத்துச் சென்றுவிட்டது. இதற்கு அண்மையில் பெய்த மழையே சாட்சி.
தி.மு.க. அரசின் தவறான கொள்கையும், மோசமான அமலாக்கமும், ஊழலுக்கு வழிவகுக்கும் செயலும்தான் சென்னை மாநகராட்சி இந்த நிலைமைக்கு வந்துள்ளதற்கு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்த நிலையில், பெரிய கல்வி நிறுவனங்கள் மற்றம் தொழில் அமைப்புகளின் சொத்து வரியை மறுமதிப்பீடு செய்வதுதான் முதல் நோக்கம் என்று சென்னை மாநகராட்சியின் துணை மேயர் தெரிவித்து இருப்பதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. துணை மேயரின் இந்த அறிவிப்பினைப் பார்க்கும்போது, மீண்டும் ஒரு சொத்து வரி உயர்வு குடியிருப்புகளுக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
சொத்து வரி பன்மடங்கு உயர்த்தப்பட்ட பின்பும், நிதி நெருக்கடி காரணமாக திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதில் சுணக்கம் என்று சொன்னால், திட்டங்களில் முறைகேடுகள் அதிக அளவுக்கு நடக்கின்றன என்பதுதான் பொருள். இந்த நிலையில், முறைகேட்டினை தவிர்த்து, வரி வசூலை தீவிரப்படுத்தி, திட்டங்களை ஒளிவுமறைவற்ற முறையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்காமல் மீண்டும் பெரும் கல்வி நிறுவனங்கள், தொழில் அமைப்புகளுக்கான சொத்து வரியை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்று இப்போதே அச்சாரமிட்டு பின் அனைத்திற்கும் சொத்து வரியை உயர்த்த முயற்சிக்கும் தி.மு.க. அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை சொத்து வரி உயர்வு என்பது நியாயமற்றது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
சொத்து வரி உயர்வு என்ற பேச்சுக்கே இடமளிக்காமல், திறமையான நிர்வாகத்தின்மூலம் திட்டப் பணிகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார்.