கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான போலீசார் விசாரணையில் பல்வேறு உண்மைகள் வெளிவந்துள்ளது


கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான போலீசார் விசாரணையில் பல்வேறு உண்மைகள் வெளிவந்துள்ளது
x

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான போலீஸ் விசாரணையில் பல்வேறு உண்மைகள் வெளிவந்துள்ளது என்றும், தற்போதைய நிலையில் அதை வெளியிட முடியாது என்றும் ஐகோர்ட்டு உத்தரவில் கூறியுள்ளது.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரித்து வருகிறார். இதுகுறித்து அவர் பிறப்பித்த உத்தரவு நேற்று வெளியானது. அதில் கூறியிருப்பதாவது:-

மாணவி மரணம் தொடர்பான விவகாரத்தை ஊடக விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவிட்ட பிறகும், அதை மீறி சில மின்னனு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது.

நடவடிக்கை

ஜிப்மர் மருத்துவர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்த பிறகும், இந்த விவகாரத்தில் நிபுணத்துவம் இல்லாத வக்கீல்கள் சிலர் இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஒப்பிட்டு மாறுபட்ட கருத்துகளை ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர். எனவே, இந்த வக்கீல்கள் மீது பார் கவுன்சில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம், இந்த ஐகோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவை பின்பற்றாத வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்கமாட்டேன்.

விரைவான விசாரணை

மாணவியின் மரண விவகாரத்தில் நடந்த சம்பவங்களை முழுமையாக வெளிக்கொண்டு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதற்காக தமிழ்நாடு அரசுக்கும், சிறப்பு புலனாய்வு போலீசாருக்கும் பாராட்டு தெரிவிக்கிறேன். இந்த விவகாரத்தில் தவறான தகவலை பரப்பும் சமூக ஊடகங்கள், யூடியூப் சேனல்கள், தனி நபர்கள் மீது போலீசார் சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணையை விரைவாக முடித்து குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்ட கோர்ட்டில் விரைந்து தாக்கல் செய்ய வேண்டும். புகார்தாரரே குற்றம் சாட்டப்பட்டவராக மாறுகின்ற பல சம்பவங்களை இந்த ஐகோர்ட்டு தனது அனுபவத்தில் பார்த்துள்ளது.

சேத மதிப்பு

மேலும், சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தாக்கல் செய்துள்ள இடைக்கால அறிக்கையில், விசாரணையின் மூலம் பல்வேறு உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அவற்றை வெளியிட முடியாது.

பள்ளி வளாகத்தில் மேஜை, நாற்காலி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை சூறையாடியது, போலீஸ், தீயணைப்பு வாகனங்களை தீயிட்டு எரித்தது என்று மொத்தம் சேத மதிப்பு ரூ.3 கோடியே 45 லட்சத்து 26 ஆயிரத்து 297 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. இதுதவிர 68-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 27-ந் தேதிக்கு தள்ளி வைக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


Next Story