வரதராஜபெருமாள் கோவில் தேரோட்டம்
மேல்மலையனூர் அருகே வரதராஜபெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திண்டிவனம்,
மேல்மலையனூர் அருகே கெங்கபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும், திருமஞ்சன அலங்காரமும் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவமூர்த்திகள் எழுந்தருளினர். அதன்பிறகு உற்சவ மூர்த்திகளுக்கும், தேருக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பக்தர்கள் கரகோஷம்
இதையடுத்து அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஒன்றியக்குழு தலைவர் கண்மணி நெடுஞ்செழியன், வட்டாரக் கல்விக்குழு தலைவர் நெடுஞ்செழியன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜா மற்றும் அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கரகோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரானது முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் நிலையை வந்தடைந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் அன்பழகன், பரம்பரை அறங்காவலர் கலையரசி ஈஸ்வரன் மற்றும் கோவில் பட்டாச்சாரியர்கள் கிராம மக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வளத்தி போலீசார் செய்திருந்தனர்.