செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒவ்வொரு வார்டாக சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் உடல்நலம் குறித்தும், சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் தீவிர சிகிச்சை பிரிவிற்குள் சென்று அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து அங்குள்ள டாக்டரிடம் கேட்டறிந்தார்.
அந்த சமயத்தில் ஆலப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக்குறைவால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு டாக்டர் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்குமாறு கூறியுள்ளார். அந்த பெண்ணிடம் ஸ்கேன் எடுக்க பணம் இல்லை. மேலும் தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு அட்டையும் இல்லை என்று வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ.விடம் அந்த பெண் கூறினார். உடனே எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் ஸ்கேன் எடுக்க அந்த பெண்ணுக்கு உதவினார். இந்த சம்பவத்தை அங்கு இருந்த பலரும் பாராட்டினார்கள்.
மேலும் ஆஸ்பத்திரி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்கவும், நோயாளிகளுக்கு நல்லமுறையில் சிகிச்சையளிக்கவும் அவர் டாக்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின் போது ஆஸ்பத்திரி டீன் முத்துகுமரன், நகரமன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கே.பி.ராஜன், டாக்டர்கள் சங்க தலைவர் டாக்டர் மோகன்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.