தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகள் சென்ற வேன்கள் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் பலி


தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகள் சென்ற வேன்கள் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் பலி
x
தினத்தந்தி 14 Jan 2024 2:45 AM IST (Updated: 14 Jan 2024 2:46 AM IST)
t-max-icont-min-icon

படுகாயம் அடைந்த வேன் டிரைவர்கள் மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் என மொத்தம் 16 பேர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராமேசுவரம்,

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் ராமேசுவரத்திற்கு சுற்றுலா வந்திருந்தனர். பின்னர் அவர்கள், ராமேசுவரத்தில் இருந்து வேன் ஒன்றில் தனுஷ்கோடி சென்றனர். இந்த வேனை ராமேசுவரம் ரெயில்வே பீடர் ரோடு பகுதியை சேர்ந்த நாகநாதன் (வயது 52) ஓட்டிச்சென்றார். இதே போல் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இருந்து வடமாநில சுற்றுலா பயணிகளுடன் வேன் ஒன்று ராமேசுவரம் நோக்கி வந்தது. இந்த 2 வேன்களும் தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் அருகே உள்ள சாலையில் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஒரு வேன் சாலையின் குறுக்கே கவிழ்ந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். 2 வேன்களிலும் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த வடமாநிலத்தினரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அனைவரும் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். இருப்பினும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த மனுபாய் (42), நாதன் பாய் (70) ஆகிய 2 பெண்கள் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டனர்.

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மேல் சிகிச்சைக்காக அதே மாநிலத்தை சேர்ந்த முதியவர் கிர்தாரி (70) மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

படுகாயம் அடைந்த வேன் டிரைவர்கள் மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் என மொத்தம் 16 பேர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story