வண்டிமலைச்சி அம்மன் கோவில் திருவிழா
செங்கோட்டையில் வண்டிமலைச்சி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
செங்கோட்டை:
செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் வண்டி மலைச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 9-ந் தேதி கணபதி மற்றும் துர்கா ஹோமத்துடன் தொடங்கியது.
கடந்த 15-ந் தேதி குடி அழைப்பு, அம்மன் புஷ்ப வாகனத்தில் எழுந்தருளல், 16-ந் தேதி பால்குடம் எடுத்து வருதல், இரவில் அம்மன் சப்பரத்தில் சிங்க வாகனத்தில் வீதி உலா வருதல் நடைபெற்றது. நேற்று முன்தினம் பொங்கலிடும் நிகழ்ச்சியும், இன்னிசை கச்சேரியும் நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான நேற்று மாலை 3 மணிக்கு வண்டி மலைச்சி அம்மன் சிங்க வாகனத்தில் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. அப்போது, பக்தர்கள் பல்வேறு சாமி வேடங்கள் அணிந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலமானது சுலைமான் நபி ஜும்மா பள்ளிவாசல் அருகில் வரும்போது ஊர்வலத்தை வரவேற்று மதம் நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டும் வகையில் இஸ்லாமியர்கள் சார்பில் பள்ளி ஜமாத் கமிட்டி தலைவர் செய்யதுபட்டாணி, துணைத்தலைவர் முகம்மது இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள், பக்தர்களுக்கு குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் கொடுத்தனர். தொடர்ந்து நகரில் நுழைவு வாயில் அமைந்து இருக்கும் குண்டாற்று தெப்பத்தில் இரவில் அம்மன் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.