வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் - ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
வந்தே பாரத் ரெயில் என்பது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட மினி அதிவேக புல்லட் ரெயில் ஆகும்.
சென்னை,
சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்.-ல் உலக புகழ் பெற்ற ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் முதல் முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடியில் 'ரெயில்-18' என்ற அதிநவீன ரெயில் தயாரிக்கப்பட்டது.
மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த அதிவேக ரெயிலுக்கு 'வந்தே பாரத் விரைவு ரெயில்' என்று பெயரிடப்பட்டது. இந்த ரெயில் புதுடெல்லி-வாரணாசி இடையேயும், புதுடெல்லி-காத்ரா இடையேயும் இயக்கப்படுகிறது. சொகுசாகவும், விரைவாகவும் பயணிக்க வசதியாகவும் இருப்பதால் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பயணிகள் வரவேற்பு காரணமாக கூடுதலாக வந்தே பாரத் ரெயில்களை தயாரித்து வழங்க ரெயில்வே வாரியம் உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை ஐ.சி.எப்., கபுர் தலா ரெயில் பெட்டி தொழிற்சாலை, ரேபரேலி நவீன ரெயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை ஆகிய தொழிற்சாலைகளில் வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்படுகின்றன.
இதில் சென்னை ஐ.சி.எப்-ல் மட்டும் 102 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக ஒரு வந்தே பாரத் ரெயில் தற்போது தயாராகி உள்ளது. இந்த ரெயில் இயக்கப்பட்டு விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் புதிய மாதிரிகளை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஆய்வு செய்தார். இதற்காக அவர் இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் காரில் ஐ.சி.எப். புறப்பட்டு சென்றார்.
அங்கு புதிதாக தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரெயிலை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ரெயிலின் அடிப்புற பகுதியில் உள்ள ஒவ்வொரு சாதனங்களையும் பார்த்து அவர் ஆய்வு செய்தார். ரெயிலில் உள்ள நவீன அம்சங்களை பார்வையிட்டு அதன் வசதிகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் லக்னோவில் உள்ள ரெயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவன அதிகாரிகளும் இந்த வந்தே பாரத் ரெயிலை ஆய்வு செய்கிறார்கள். அதன்பிறகு இந்த ரெயில், ரெயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.