காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை விமர்சிக்கிறார்கள் - கே.எஸ். அழகிரி டுவீட்
காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை விமர்சித்து வருகிறார்கள்.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,
13 வயதில் அரசியலில் பிரவேசம் செய்து 95 வயது வரை தமிழ்ச் சமுதாயத்திற்காக அல்லும் பகலும் அயராது உழைத்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், எழுத்தாற்றல் மூலம் ஆற்றிய மகத்தான தொண்டை போற்றுகிற வகையில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கப்பட உள்ளது.
சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு கடந்த ஒரு மாத காலம் நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ள கடற்கரை பகுதியில் அதிகாலையில் ஆய்வு செய்து அங்கு ஆமைகளோ, மீன்களோ இல்லை என்று அறிக்கை வழங்கியிருக்கிறது.
இராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு ஏறத்தாழ 10 மைல் தொலைவிற்கு கடலில் தான் இருப்புப் பாதை அமைக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள ஏன் மறுக்கிறார்கள் ?
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசினால் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு மக்களின் பேராதரவு பெற்று வருவதைச் சகித்துக் கொள்ள முடியாத, காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை விமர்சித்து வருகிறார்கள்.
இத்தகைய விமர்சனங்களை வைப்பவர்கள் யார் என்று தமிழக மக்களுக்குத் தெரியும்.
மலிவான அரசியல்வாதிகளிடம், மலிவான விமர்சனத்தைத் தான் எதிர்பார்க்க முடியும். போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும்.
என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற அணுகுமுறையில் தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் செயலாற்ற வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.