வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் பரிதாப சாவு


தினத்தந்தி 18 Sept 2023 12:30 AM IST (Updated: 18 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

குருவிகுளம் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

தென்காசி

திருவேங்கடம்:

குருவிகுளம் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

பெயிண்டர்கள்

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள குருவிகுளம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மகன் ரமேஷ் (வயது 22).

அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் துளசி மணி என்ற துர்க்கை ராஜ் (18). இவர்கள் 2 பேரும் பெயிண்டராக வேலை செய்து வந்தனர்.

வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்

நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலைக்கு ேமாட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு, ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

குருவிகுளம் அருகே கரட்டுமலை பகுதியில் வந்தபோது, எதிரே குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றுவிட்டு அருப்புக்கோட்டை நோக்கி ஒரு வேன் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் வேன்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது.

2 பேர் பலி

இந்த கோர விபத்தில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். துர்க்கை ராஜ் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

இதுகுறித்து உடனடியாக குருவிகுளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். துர்க்கை ராஜை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி துர்க்கை ராஜ் பரிதாபமாக இறந்தார்.

டிரைவர் கைது

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் அருப்புக்கோட்டை பாளையம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வகணேஷ் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குருவிகுளம் அருகே விபத்தில் 2 வாலிபர்கள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story