சங்கரன்கோவிலில் காவலர்கள் தாக்கியதில் வேன் டிரைவர் உயிரிழப்பு - முதல்-அமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்
தவறிழைத்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவதோடு அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை,
சங்கரன்கோவிலில் காவலர்கள் தாக்கியதில் வேன் டிரைவர் முருகன் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்திடவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிவாரணமும், அரசு வேலையும், வீடும் வழங்கிடுவதோடு, குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்றிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தெரிவித்து இருப்பதாவது:-
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகரில் போக்குவரத்து நெரிசலில் முன்சென்ற ஆட்டோவை லேசாக இடித்ததற்காக வேன் டிரைவர் முருகன் என்பவரை அங்கிருந்த காவலர்கள் மூன்று பேர் சராமரி தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற காவல்துறையினரின் சட்டவிரோத கண்மூடித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன், இதுபோன்ற மனித உரிமை மீறிய செயல்களை தடுப்பதற்கு உரிய தலையீடுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.
எனவே,
1. தவறிழைத்த காவல்துறையினர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவதோடு அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும்.
2. இத்தகைய சாதாரண தவறுகளுக்காக காவல்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்கு, காவல்துறையினர் இதுபோன்ற தவறிழைத்தால் அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவதை கட்டாயமாக்கப்பட வேண்டும்.
3. தமிழ்நாடு அரசு மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கான முயற்சிகளை எடுத்தாலும் இத்தகைய சம்பவங்கள் நடப்பது தமிழ்நாட்டிற்கு பெருமை அளிப்பதாக இல்லை. எனவே, கடும் நடவடிக்கைகளும், பயிற்சிகளும், சீர்த்திருத்தங்களும் காவல்துறையில் மேற்கொள்ள வேண்டும்.
4. வேன் டிரைவர் முருகனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், வீடும் அளித்திட வேண்டும். முருகனின் குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்.
5. இழப்பீடுத் தொகையை தவறிழைத்த காவல்துறையினரிடமிருந்தே வசூல் செய்திட வேண்டும்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மேற்கண்ட நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொண்டு உயிரிழந்த முருகன் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், ஆறுதலும் அளிக்க வேண்டுமென கேட்டுக் கொளகிறோம்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.