வால்பாறை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ரூ.4 கோடியில் புதிய கட்டிடம் திறப்பு


வால்பாறை அரசு கலை, அறிவியல் கல்லூரியில்  ரூ.4 கோடியில் புதிய கட்டிடம் திறப்பு
x

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.4 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் திறக்கப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.4 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் திறக்கப்பட்டு உள்ளது.

கோரிக்கை

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2006 -ம் ஆண்டு மார்ச் மாதம் பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியாக திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2019 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் வால்பாறை நகரில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் போதிய இடவசதி இல்லாததால் 2006 -ம் ஆண்டு வால்பாறை அருகில் உள்ள சிங்கோனா அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட போது இருந்த கட்டிடத்தில் முதலாமாண்டு மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதனால் கல்லூரி பேராசிரியர்கள் முதலாமாண்டு மாணவ-மாணவிகளுக்காக சிங்கோனா எஸ்டேட் சென்று வருவதோடு கல்லூரி முதல்வரின் நேரடி கண்காணிப்பில் வகுப்புகள் நடைபெறமுடியாத நிலையினாலும் நிர்வாக சிக்கல் இருந்து வந்தது.இதனால் முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கும் வால்பாறை நகரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

திறப்பு

இதனை தொடர்ந்து ரூ.4 கோடியே 60 லட்சம் மதிப்பில் 11 வகுப்பறைகள், நூலகம், ஆய்வகம் மற்றும் சிறியளவிலான கலையரங்கத்துடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டு பல நாட்களாக திறக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கோவையில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கல்லூரியின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து கல்லூரி முதல்வர் செல்லமுத்துக்குமாரசாமி தலைமையில் பேராசிரியர்கள் புதிய கட்டிடத்தின் முன் குத்துவிளக்கு ஏற்றினர். இதையடுத்து கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் முதலாமாண்டு மாணவ, மாணவிகளை அவர்களது பெற்றோருடன் புதிய கட்டிட வகுப்பறைக்குள் அழைத்துச் சென்று அமரவைத்து கல்லூரி நடவடிக்கைகள் குறித்து விளக்கி வாழ்த்துக்கள் கூறினார்கள்.


Next Story