வள்ளுவர்கோட்டம் ரூ.80 கோடியில் புனரமைக்கப்படும் -அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு
சென்னை அருகே அதிநவீன திரைப்பட நகரம் உருவாக்கப்படும் என்றும், வள்ளுவர்கோட்டம் ரூ.80 கோடியில் புனரமைக்கப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று மாலையில் நடைபெற்றது. இதில் பேசிய உறுப்பினர்களுக்கு பதில் அளித்து இந்த துறையின் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார். பின்னர் அவர் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:-
* சென்னை வள்ளுவர்கோட்டத்தில் புனரமைப்பு பணிகள் சுமார் ரூ.80 கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த அளவில் மேற்கொள்ளப்படும்.
* டாக்டர் சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோரின் சிறப்புகள், பெருமைகளை எதிர்கால தலைமுறையினர் அறியும் வகையில் திராவிட இயக்க சரித்திர நிகழ்வுகளை தாங்கி ஒரு வரலாற்று சின்னம் அமைகின்ற அளவுக்கு திராவிட இயக்க தீரர்கள் கோட்டம் தலைநகர் சென்னையில் அமைக்கப்படும்.
காமராஜர், டி.எம்.சவுந்தரராஜனுக்கு சிலை
* பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தை நிறைவேற்றக் காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராஜருக்கு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சிலை அமைக்கப்படும்.
* பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மாநகரில் உருவச்சிலை நிறுவப்படும்.
திரைப்பட நகரம்
* சென்னை அருகே அதிநவீன திரைப்பட நகரம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.
* தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் அதிநவீன படப்பிடிப்பு தளங்கள் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.
* தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களின் குறும்பட படப்பிடிப்பு தயாரிப்பு செலவுகள் உயர்த்தி வழங்கப்படும்.
* பொதுமக்களின் விருப்பத்தின் பேரில் சேலம், விருத்தாச்சலம், புதுக்கோட்டை அரசு கிளை அச்சகங்களில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும்.
மேற்கண்ட அறிவிப்புகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டார்.