பம்பரம் சின்னம் கேட்டு வைகோ வழக்கு: 2 வாரத்தில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவு
ம.தி.மு.க. தரப்பில் அளிக்கப்பட்டுள்ள புதிய விண்ணப்பம் மீது உரிய முறையில் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் ம.தி.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, புதிதாக விண்ணப்பம் அளிக்கும்படி ம.தி.மு.க.வுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோர்ட்டு உத்தரவின்படி ம.தி.மு.க. தரப்பில் அளிக்கப்பட்டுள்ள புதிய விண்ணப்பம் மீது உரிய முறையில் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ம.தி.மு.க. அளித்த விண்ணப்பம் மீது இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.