அரங்குளநாதர் கோவிலில் வைகாசி விசாக தெப்ப உற்சவம்
அரங்குளநாதர் கோவிலில் வைகாசி விசாக தெப்ப உற்சவம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் சுயம்புலிங்க அரங்குளநாதர் சமேத பெரியநாயகி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா நடைபெற்று வந்தது. இதையடுத்து திருவிழாவின் 10-வது நாள் அன்று சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் வீதி உலா நடைபெற்றது. இதையடுத்து சுவாமி-அம்பாளுக்கு பட்டாடை உடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் தங்க ஆபரணங்கள் சாற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து சுவாமி-அம்பாள் தேரோடும் வீதிகளில் வீதி உலா வந்து கோவில் தெப்பக்குளத்தில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினர். பின்னர் தெப்பத்தில் 3 முறை சுற்றிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் அமைச்சர் மெய்யநாதன் மற்றும் திருவரங்குளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து இளைஞர்கள், பொதுமக்கள் சார்பில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.