திருப்பரங்குன்றம் கோவிலில் வைகாசி விசாக திருவிழா
திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமானுக்கு காப்பு கட்டுதலுடன் வைகாசி விசாக திருவிழா நேற்று தொடங்கியது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமானுக்கு காப்பு கட்டுதலுடன் வைகாசி விசாக திருவிழா நேற்று தொடங்கியது.
வசந்த உற்சவம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் 10 நாட்கள் விசாக திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதில் 8 நாட்கள் வசந்த உற்சவமாகவும், ஒருநாள் விசாக விழாவும், மற்றொரு நாள் மொட்டையரசு உற்சவமாகவும் கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டிற்கான விசாகத்திருவிழாவின் தொடக்கமாக நேற்று வசந்த உற்சவ விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா தொடர்ந்து 3-ந்தேதி வரை நடக்கிறது.
வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர்
திருவிழாவின் முதல் நாளான நேற்று மாலை 6 மணி அளவில் உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி புறப்பட்டு வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தொட்டியில் தண்ணீர் நிரப்பபட்டு தயாராக இருந்த மேடையில் சுப்பிரமணியசுவாமி அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதனையடுத்து அம்பாளுடன் சுவாமிக்கு அபிஷேகமும், மகா தீப தூபஆராதனையும் நடந்தது.
வருகிற 1-ந்தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு வசந்த மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி வசந்த நிகழ்ச்சி நடக்கிறது.
பாலாபிஷேகம்
.2-ந்தேதி விசாக திருவிழா நடக்கிறது அன்று அதிகாலை 5 மணிக்கு சண்முகர் சன்னதியில் இருந்து கம்பத்தடி மண்டப வளாகத்தில் உள்ள விசாகொறடு மண்டபத்திற்கு வள்ளி, தெய்வானை சமேத சண்முகப் பெருமான் எழுந்தருளுகிறார்.இதனையடுத்து சண்முகப்பெருமானுக்கும் வள்ளி, தெய்வானைக்கும் குடம், குடமாக பாலாபிஷேகம் நடக்கிறது.
இதுதவிர இளநீர் காவடி, பன்னீர்காவடி, புஷ்ப காவடி, பறவை காவடி உள்ளிட்ட விதவிதமான காவடிகள் எடுத்து வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 3-ந்தேதி மொட்டையரசு உற்சவம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் தலைமையில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.