அரங்குளநாதா் ேகாவில் வைகாசி விசாக தேரோட்டம்
திருவரங்குளம் அரங்குளநாதர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அரங்குளநாதர் கோவில்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் வரலாற்று புகழ்மிக்க சோழர் காலத்து பழம்பெருமை வாய்ந்த சுயம்புலிங்க அரங்குளநாதர் சமேத பெரியநாயகி அம்பாள் கோவில் வைகாசி விசாக திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை இரவு வேளைகளில் காமதேனு, அன்னம், சிம்மம் வெள்ளி குதிரை, வெட்டுவான் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்றது.
தேரோட்டம்
இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி-அம்பாள் பட்டாடை உடுத்தி, தங்க ஆபரணங்கள் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் திருத்தேர்களில் எழுந்தருளினர். பின்னர் காலை 10 மணிக்கு மேள தாளம் முழங்க திரளான பக்தர்கள் சிவ, சிவ... ஹர, ஹர... கோஷத்துடன் 2 தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.
அப்போது சிவ பக்தர்கள் சிவபுராணம் பாடியவாறு தேர் முன்பாக சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடி வந்து கோவில் நிலையை 11.15 மணிக்கு வந்தடைந்தது. இதில் பக்தர்கள் ஆங்காங்கே கூடி நின்று சுவாமி-அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதில் தேவஸ்தான அலுவலர்கள், திருப்பணி கமிட்டியினர், மண்டகபடிதாரர்கள், விழா குழுவினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.