வைகாசி விசாகம்; நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு விரைவு ரெயில் இயக்கம்
வைகாசி விசாகத்தையொட்டி வரும் 12-ந் தேதி நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு விரைவு ரெயில் இயக்கப்பட உள்ளது.
நெல்லை,
வைகாசி விசாக திருநாளில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டு வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வைகாசி விசாகம் வரும் நிலையில், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல்லை-திருச்செந்தூர் இடையே முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரெயில் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி 12-ந் தேதி நெல்லை-திருச்செந்தூர் சிறப்பு ரெயில் (06703) நெல்லையில் இருந்து காலை 11.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். மறுமார்க்கத்தில் திருச்செந்தூர் - நெல்லை இடையே இந்த சிறப்பு ரெயிலானது (06704) திருச்செந்தூரில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10.10 மணிக்கு நெல்லை வந்து சேரும். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் பயணிகளின் வசதிக்காக பாலக்காடு - திருச்செந்தூர் (16731) மற்றும் திருச்செந்தூர் - நெல்லை (06678) விரைவு ரெயில்களில் வருகிற 13-ந்தேதி முதல் 13-ந்தேதி வரையும், நெல்லை - திருச்செந்தூர் (06673) மற்றும் பாலக்காடு -திருச்செந்தூர் (16732) விரைவு ரெயில்களில் வருகிற 8-ந்தேதி முதல் 12-ந்தேதி வரையும் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு பொது பெட்டி இணைக்கப்பட உள்ளது என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.