சிவன் கோவில்களில் வைகாசி திருவிழா தேரோட்டம்
ஏர்வாடி, களக்காடு சிவன் கோவில்களில் வைகாசி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தோ் இழுத்தனர்.
ஏர்வாடி:
ஏர்வாடி, களக்காடு சிவன் கோவில்களில் வைகாசி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தோ் இழுத்தனர்.
திருவழுதி ஈஸ்வரர் கோவில்
நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் பழமை வாய்ந்த திருவழுதி ஈஸ்வரர்- பெரியநாயகி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு வைகாசி தேரோட்ட திருவிழா கடந்த 24-ந் தேதி ெகாடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வருதலும் நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி- அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேருக்கு எழுந்தருளினர். அதன் பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். முன்னதாக செங்கோல் ஆதீனம் கொடி அசைத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நாங்குநேரி தாசில்தார் விஜய் ஆனந்த், களக்காடு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வ கருணாநிதி, மாவட்ட துணை தலைவர் நம்பி உள்பட திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
சத்தியவாகீஸ்வரர் கோவில்
களக்காடு சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 24-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினசரி காலையில் சுவாமி, அம்பாள் ஏக சிம்மாசனம் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், கும்பாபிஷேகமும், இரவில் சிறப்பு அலங்கார தீபாராதனைகளுக்கு பின்னர் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வருதலும் நடந்து வருகிறது.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு சிறப்பு அபிஷேகத்திற்கு பின் கோமதி அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளினார். அதனைதொடர்ந்து மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகம்மது ஷபிர் ஆலம், நாங்குநேரி தாசில்தார் விஜய் ஆனந்த், கோவில் நிர்வாக அதிகாரி மாரியப்பன் மற்றும் அனைத்து சமுதாய மண்டகப்படிதாரர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ரதவீதிகளை சுற்றி தேர் நிலைக்கு வந்தது. அதன் பிறகு சுவாமி-அம்பாள் திருத்தேர் தடம் பார்க்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. களக்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 10-ம் நாளான இன்று தீர்த்தவாரி நடக்கிறது.