வைகை அணை நீர்மட்டம் 50 அடியாக உயர்வு


வைகை அணை நீர்மட்டம் 50 அடியாக உயர்வு
x
தினத்தந்தி 5 Oct 2023 6:30 AM IST (Updated: 5 Oct 2023 6:30 AM IST)
t-max-icont-min-icon

நீர்வரத்து அதிகரிப்பால் வைகை அணை நீர்மட்டம் 50 அடியாக உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி

வைகை அணை

தென்மேற்கு பருவமழை தொடங்கி 3 மாதங்கள் ஆனநிலையில் தேனி மாவட்டத்தில் இதுவரை போதுமான அளவு மழை பெய்யவில்லை. அதற்கு மாறாக கோடையை போல வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. போதுமான மழை இல்லாத காரணத்தால், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்றுவிட்டது. இதன் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் சரிந்து கொண்டே வந்தது.

அணையில் நீர்இருப்பு இல்லாத காரணத்தால் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் முதல்போக பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. வைகை அணையில் இருந்து மதுரை, சேடப்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம் பகுதியின் குடிநீர் தேவைக்காக மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

நீர்மட்டம் உயர்வு

வைகை அணையை பொறுத்தவரையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரே நீர்ஆதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் தேனி மாவட்டத்திற்கு திறக்கப்பட்டது. இதனால் வைகை அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 915 கனஅடியாக அதிகரித்தது.

இதையடுத்து அணையின் நீர்மட்டம் கடந்த 3 மாதங்களுக்கு பின்னர் உயர்ந்துள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியது. மேலும் தொடர்ந்து மழை பெய்தால் வைகை அணைக்கு கூடுதல் நீர்வரத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story