முதுகுளத்தூரில் வறண்டு கிடக்கும் சரணாலயங்கள்
வைகை தண்ணீர் கடலில் கலந்து வீணானதால் முதுகுளத்தூரில் பறவைகள் சரணாலயங்கள் வறண்டு கிடக்கிறது.
முதுகுளத்தூர்,
வைகை தண்ணீர் கடலில் கலந்து வீணானதால் முதுகுளத்தூரில் பறவைகள் சரணாலயங்கள் வறண்டு கிடக்கிறது.
5 சரணாலயங்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் அமைந்துள்ளன. ராமநாதபுரம் சக்கரக் கோட்டை கண்மாய், நயினார் கோவில் அருகே தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம், சாயல்குடி அருகே மேலச் செல்வனூர் பறவைகள் சரணாலயம் மற்றும் முதுகுளத்தூர் அருகே காஞ்சிரங்குளம் சித்திரங்குடி என 5 பறவைகள் சரணாலயங்கள் அமைந்துள்ளன.
முதுகுளத்தூர் தாலுகாவில் சித்திரங்குடி, காஞ்சிரங்குளம் என 2 பறவைகள் சரணாலயங்கள் அமைந்துள்ளன. இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பருவமழை சீசன் தொடங்கிய பின்னர் நவம்பர் மாதத்தில் மஞ்சள் மூக்கு நாரை, செங்கால் நாரை, கூலைக்கடா, வெள்ளை அருவால் மூக்கன், கருப்பு அரிவாள் மூக்கன், சாம்பல் நிறநாரை, சாம்பல் நிற கூலைக்கடா என பல வகையான பறவைகள் வரும். இவ்வாறு வரும் பறவைகள் மரக்கிளைகளில் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சுபொரித்து மீண்டும் ஏப்ரல் அல்லது மே மாதம் திரும்பிச்செல்லும்.
பருவமழை
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி ஒரு மாதம் கடந்த பின்னரும் முதுகுளத்தூர் மற்றும் சுற்றியுள்ள பல கிராமங்களிலும் பருவமழை போதிய அளவு பெய்யவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்த பறவைகள் சரணாலயத்திற்கு வைகை தண்ணீர் வரும் பாதை முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் தண்ணீர் வர வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரிக்கை
மத்திய அரசால் ராம்சர் அங்கீகாரம் கிடைத்த சித்திரங்குடி மற்றும் காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயங்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் பறவைகள் வராமல் வெறிச்சோடி காணப்பட்டு வருவது பறவைகள் ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
வரும் ஆண்டுகளிலாவது இந்த பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பாதைகள் ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் சரி செய்து வைகை தண்ணீரை பறவைகளுக்காக கொண்டுவர மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.