5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்
நீலகிரியில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாமை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
ஊட்டி
நீலகிரியில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாமை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
தடுப்பூசி முகாம்
நீலகிரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில், தீவிர மிஷன் இந்திரதனுஷ் திட்ட தடுப்பூசி முகாம் ஊட்டி வண்ணாரப்பேட்டை அங்கன்வாடி மையத்தில் நேற்று நடந்தது. இந்த முகாமை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
நீலகிரியில் தீவிரப்படுத்தப்பட்ட மிஷன் இந்திரதனுஷ் திட்ட தடுப்பூசி முகாம் இந்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில 3 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. முதல் சுற்று முகாம் நேற்று முதல் வருகிற 12-ந் தேதி வரையும், 2-ம் சுற்று முகாம் அடுத்த மாதம் 11-ந் தேதி முதல் 16-ந் வரையும், 3-ம் சுற்று முகாம் அக்டோபர் 9-ந் தேதி முதல் 14-ந் தேதி வரையும் நடைபெற உள்ளது.
கூடுதல் கவனம்
இதன் மூலம் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களை கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று கணக்கெடுத்து, இதுவரை தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தப்படும். தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி, நிமோகாக்கல் தடுப்பூசி மற்றும் போலியோ தடுப்பூசி, தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் உள்ள மற்ற தடுப்பூசிகளுடன் சேர்த்து சிறப்பு கவனம் செலுத்தி வழங்கப்படும்.
தீவிரப்படுத்தப்பட்ட மிஷன் இந்திரதனுஷ் 5.0-ன் கீழ் இடம் பெயர்ந்தவர்கள், கட்டிட வேலை செய்பவர்கள், தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள், நகர்புறங்களிலுள்ள குடிசைவாழ் மக்கள், மலைவாழ் மக்கள், கிராம சுகாதார செவிலியர் பணியிடம் காலியாக உள்ள இடங்களில் வசிப்பவர்கள் போன்ற கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய பகுதிகளில் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்படும்.
நோய்கள் இல்லாத மாவட்டம்
தவற விட்ட அனைத்து பயனாளிகளையும் ஒவ்வொரு சுற்றிலும் செயலியில் (U-WIN) பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்துவதன் மூலம், அனைத்து தடுப்பூசி செலுத்தப்படாத 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் பயன் பெற்று, நீலகிரியை தடுப்பூசிகளினால் தடுக்கப்படும் நோய்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, நகர் நல அலுவலர் ஸ்ரீதரன், ஊட்டி வட்டார மருத்துவ அலுவலர் முருகேசன், தாசில்தார் சரவணக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.