அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Oct 2023 12:56 PM IST (Updated: 5 Oct 2023 1:00 PM IST)
t-max-icont-min-icon

அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கற்றவரை கண்ணுடையவர் என்றும், கல்லாதவரை புண்ணுடையவர் என்றும் வள்ளுவர் கூறுவதிலிருந்தே கல்வியின் மேன்மையை நம்மால் உணர முடிகிறது. நம் நாட்டு மக்கள் அனைவரும் கண்ணுடையவராக விளங்கினால் தான் நம் நாடு முன்னேற்றமடைந்து, நாட்டு மக்கள் எல்லாச் செல்வங்களும் பெற்று வளமடைய முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு, மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கேற்ப ஒவ்வொரு கல்லூரிகளிலும் ஆசிரியர் நியமனம், பணியாளர் நியமனம் போன்றவற்றை அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும்.

ஆனால், தமிழ்நாட்டில் இதற்கு முற்றிலும் முரணான நிலை நிலவுகிறது. சென்னை உயர் நீதிமன்றமே கேள்வி கேட்கும் அளவுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் அதிக அளவில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப தமிழ்நாடு முழுவதும் இதுதான் யதார்த்தமான நிலைமை.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு விதிகளின்படி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் 1,745 பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால், 981 பணியிடங்களுக்கு மட்டுமே அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்ட 981 பணியிடங்களில் தற்போது 556 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் விதிகளின்படி 1,189 பணியிடங்களும், அண்ணா பல்கலைக்கழகத்தால் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை வைத்துப் பார்க்கும்போது 425 பணியிடங்களும் காலியாக உள்ளது தெரிய வருகிறது. இது தொடர்பாக நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளதன் காரணமாக நிரந்தர அடிப்படையில் பேராசிரியர்களை நியமிக்கும் முயற்சியில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

சென்னை ஐகோர்ட்டால் ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பினை நடைமுறைப்படுத்தாத நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிலை ஏற்க சென்னை ஐகோர்ட் அமர்வு மறுத்துவிட்டது. ஏற்கெனவே தற்காலிகமாக பணிபுரிந்து கொண்டிருப்பவர்களின் அனுபவத்தினை கணக்கில் எடுத்துக் கொண்டு, அதற்கு ஒரு முக்கியத்துவம் அளித்து காலிப் பணியிடங்களை நிரப்பி இருக்கலாம். ஆனால், அதைக்கூட தி.மு.க. அரசு செய்யாத நிலையில், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்திருப்பது அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தின் திறமையின்மையை எடுத்துக் காட்டுகிறது.

அண்ணாபல்கலைக்கழகத்திலேயே இந்த அளவுக்கு காலிப் பணியிடங்கள் இருக்கிறதென்றால், பிற அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசுக் கல்லூரிகளின் நிலைமையை எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இந்த நிலைமை நீடித்தால், தமிழ்நாட்டு மாணவ, மாணவியரின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் குறித்து ஒரு கணக்கெடுப்பை நடத்தி, அந்த இடங்களை முறையான தேர்வுமூலம் போர்க்கால அடிப்படையில் நிரப்பிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story