காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்
அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஊட்டி
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 16-வது வட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு வட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சலீம் சங்க கொடியேற்றினார்.ள்
கூட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி பணிகளில் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் விடுப்பை உடனே திரும்ப பெற வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தை ஒழித்து காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள 4½ லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் தேவையான டாக்டர்களை நியமிக்க வேண்டும். ஊட்டி பிங்கர்போஸ்டில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் வந்து செல்லும் வகையில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அரசு பஸ்களை இயக்க வேண்டும். அங்குள்ள வளாகத்தில் ஏ.டி.எம். வசதி ஏற்படுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில துணைத்தலைவர் பரமேஸ்வரி, வட்ட துணைத் தலைவர்கள் குணசேகரன், ஆரிப்கான், மாவட்ட பொருளாளர் சுரேஷ், செயலாளர் ஆனந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.