தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன்


தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன்
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று தூத்துக்குடியில் நடந்த மாநாட்டில் அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் 5-வது தேசிய உப்பு மாநாடு தூத்துக்குடியில் நேற்று நடந்தது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தொழில்நுட்பம்

நாட்டில் உப்பு உற்பத்தியில் தூத்துக்குடி 2-வது இடத்தில் உள்ளது. நாட்டின் மொத்த உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்தில் மட்டும் 79 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கே 9 சதவீதம் மட்டும் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, குஜராத் மாநில உப்பு உற்பத்தியாளர்கள் கடைபிடிக்கும் உத்திகள், தொழில்நுட்பம் போன்றவற்றை இங்கே உள்ள உற்பத்தியாளர்களும் பின்பற்றி உப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இங்கே உள்ள குறைபாடுகள் என்ன, அவைகளை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பதை அறிய இந்த மாநாடு உதவும்.

உப்பு தொழிலில் இளைஞர்களை அதிகளவில் ஈடுபடுத்தும் வகையில் இந்த மாநாடு ஊக்கப்படுத்த வேண்டும். தூத்துக்குடிக்கு அதிக தொழில்களை கொண்டுவர வேண்டும் என்ற முனைப்பில் கனிமொழி எம்.பி செயல்பட்டு வருகிறார். உப்புத்தொழிலை நவீனப்படுத்த, புதிய தொழில்நுட்பங்களை புகுத்த, உப்பில் இருந்து மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்க உற்பத்தியாளர்கள் முன்வர வேண்டும். இந்த தொழிலை மேம்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

உப்பு கழக மேலாண்மை இயக்குனர்

தமிழக உப்பு கழகத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைவர் கே.ராஜாமணி பேசியதாவது:-

தமிழ்நாடு உப்பு கழகத்துக்கு சொந்தமான நிலம் 8 ஆயிரம் ஏக்கர் உள்ளது. இதில் 4 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே உப்பு உற்பத்தி செய்து வருகிறோம். இதன்மூலம் 1,300 தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 1.5 லட்சம் முதல் 1.7 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்கிறோம். கடந்த ஆண்டு பருவம் தப்பிய மழை உள்ளிட்ட காரணங்களால் 75 சதவீதம் தான் உற்பத்தி இருந்தது. இந்த ஆண்டில் இதுவரை 1.25 லட்சம் டன் உற்பத்தி செய்துள்ளோம்.

நாட்டில் உப்பு உற்பத்தியில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. இங்கு சராசரியாக ஆண்டுக்கு 24 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் மொத்த உப்பு உற்பத்தியில் மூன்றில் 2 பங்கு தூத்துக்குடியில் நடக்கிறது. எங்களிடம் உள்ள பதிவேடுகள், ஆவணங்கள்படி தமிழகத்தில் மொத்தம் 32 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த தொழிலில் இருக்கிறார்கள். சுமார் 4 ஆயிரம் உப்பு உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதில் 10 ஏக்கருக்கு குறைவான இடத்தை கொண்ட சிறு உற்பத்தியாளர்களே அதிகம். தமிழகத்தில் 3 ஆயிரத்து 891 உப்பத்தியாளர்கள் சிறு உப்பு உற்பத்தியாளர்கள். 10 முதல் 100 ஏக்கர் வரை நிலம் கொண்ட உற்பத்தியாளர்கள் 150 பேரும், 100 ஏக்கருக்கு மேல் நிலம் கொண்ட உற்பத்தியாளர்கள் 42 பேரும் உள்ளனர்.

நிவாரணம்

உப்பு தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கும் சிறப்பான திட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் கடந்த ஆண்டு சுமார் 7 ஆயிரம் உப்பு தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது. அதேபோன்று இந்த ஆண்டும் வழங்கப்படும். தமிழ்நாடு உப்பு கழகம் சார்பில் 'நெய்தல்' என்ற பெயரில் உப்பு கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க பகுதி எந்திரமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு 300 ஏக்கரில் பகுதி எந்திரமயமாக்கல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு இதனை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம். உப்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் அமைப்பாக தமிழ்நாடு உப்பு கழகம் செயல்பட்டு வருகிறது.

பறிமுதல்

மத்திய அரசின் உப்பு இலாகாவுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் தமிழகத்தில் உள்ளது. அதனை உப்பு உற்பத்தியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலங்களை உப்பு உற்பத்தி தொழிலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு வகைக்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அந்த நிலம் பறிமுதல் செய்யப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்திக்கு நல்ல சாதகமாக அம்சங்கள் உள்ளன. அதனை பயன்படுத்தி உப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, கூட்டமைப்பு தலைவர் தாமஸ் ஏ.அந்தோணி வரவேற்று பேசினார். மாநாட்டின் தலைவர் மைக்கேல் மோத்தா மாநாட்டின் நோக்கம் குறித்து விளக்கினார். வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் பேசினார். மாநாட்டில் மத்திய அரசின் உப்புத்துறை துணை ஆணையர் ரகு சக்கரபாணி, முன்னாள் ஆணையர் முகமது ஆனஸ் அன்சாரி, இந்திய உப்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் பாரத் சி.ராவல் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் இந்திய தொழில் கூட்டமைப்பு மாவட்ட துணைத்தலைவர் வெயிலா கே.ராஜா நன்றி கூறினார்.


Next Story