ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உறியடி உற்சவம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உறியடி உற்சவம் 21-ந் தேதி தொடங்குகிறது.
ஸ்ரீரங்கம்:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஆவணி மாதம் நடைபெறும் கிருஷ்ணர் ஜெயந்தி புறப்பாடு மற்றும் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கிருஷ்ணஜெயந்தி, உறியடி உற்சவத்தின் முதல் நாளான வருகிற 21-ந்தேதி காலை 9.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 9.45 மணிக்கு ஸ்ரீபண்டாரம் ஆஸ்தான மண்டபத்திற்கு வந்து சேருகிறார். அங்கு காலை 11.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். மாலை 3 மணி முதல் 3.30 மணி வரை அலங்காரம், அமுது கண்டருளுகிறார். பின்னர் மாலை 6 மணி வரை பொது ஜன சேவை நடைபெறும். அங்கிருந்து மாலை 6.15 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு 6.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
உறியடி உற்சவத்தின் இரண்டாம் நாளான 22-ந்தேதி காலை 7 மணிக்கு கிருஷ்ணன் புறப்பாடு நடைபெறுகிறது. சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளி காலை 9 மணிக்கு கிருஷ்ணன் சன்னதிக்கு வந்து சேருவார். பின்னர் மாலை 3 மணிக்கு நம்பெருமாள், உபயநாச்சியார்கள் திருச்சிவிகையில் மற்றும் கிருஷ்ணனுடன் புறப்பட்டு அம்மாமண்டபம் சாலையில் உள்ள யாதவ ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 4 மணிக்கு வந்து சேருகிறார்.
பின்னர் இரவு 7 மணிக்கு நம்பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வருகிறார். இரவு 8.15 மணியளவில் பாதாள கிருஷ்ணர் சன்னதி அருகில் உறியடி உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.