லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் உறியடி திருவிழா
ஊட்டி வண்டிச்சோலையில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் உறியடி திருவிழா நடைபெற்றது.
ஊட்டி வண்டிச்சோலையில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் உறியடி திருவிழா நடைபெற்றது.
உறியடி திருவிழா
ஊட்டி வண்டிச்சோலை பகுதியில் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் உறியடி திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான உறியடி திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.இதைத்தொடர்ந்து மதியம் 2 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாள் புஷ்ப ரதத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி தொடங்கியது.
திருவீதி உலா
அப்போது பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து வண்டிச்சோலையை சுற்றியுள்ள பகுதிகளில் 6 இடங்களில் கட்டப்பட்டு இருந்த உறிகளை அடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த இடங்களில் பேண்டு வாத்தியங்கள் முழங்க உறியடி நிகழ்ச்சி நடந்தது.
இதில் இளைஞர்கள் இசைக்கு ஏற்ப நடனமாடினர். சாமி திருவீதி உலா சென்ற போது, பக்தர்கள் வழிநெடுகிலும் சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி வண்டிச்சோலை சாலை முழுவதும் கோலமிடப்பட்டு திருவிழா கோலம் பூண்டிருந்தது. கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஜெயநாராயண கஜன சமரச நல சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.