உலகளந்த பெருமாள் கோவிலில் உறியடி நிகழ்ச்சி


உலகளந்த பெருமாள் கோவிலில் உறியடி நிகழ்ச்சி
x
தினத்தந்தி 7 Sept 2023 12:15 AM IST (Updated: 7 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ண ஜெயந்தியை யொட்டி திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் உறியடி நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

வேணுகோபாலசாமி ஜெயந்தி விழா

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் ருக்மணி சத்தியபாமா சமேத வேணுகோபாலசாமி ஜெயந்தி விழா நேற்று வெகு விமரிசையாக தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் ஜீயர் மடத்தில் அனுக்ஞை பூஜையுடன் விழா தொடங்கியது.

தொடா்ந்து நேற்று காலை கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் ருக்மணி, சத்தியபாமா சமேத வேணுகோபாலபெருமாள் முத்துபந்தல் வாகனத்தில் வீதி உலா புறப்பாடு, மதியம் அலங்கார திருமஞ்சனம், சேவை சாற்று முறை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு ஹம்ச வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. அப்போது சாமிக்கு வீடு தோறும் பக்தர்கள் தீப ஆராதனை செய்து வழிபட்டனர்.

உறியடி உற்சவம்

விழாவை தொடர்ந்து இன்று(வியாழக்கிழமை) காலை உறியடி உற்சவமும், ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேகளீசபெருமாள் புறப்பாடு, மாலையில் ருக்மணி, சத்தியபாமா சமேத வேணுகோபால சாமி மூலவர் மற்றும் உற்சவர் அலங்கார திருமஞ்சனம் சேவை சாற்றுமுறை, இரவு சிம்ம வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெறுகிறது.

பின்னர் நாளை(வெள்ளிக்கிழமை) காலை சின்ன சேஷ வாகனத்திலும், மதியம் ஜீயர் மடம் எழுந்தருளும் நிகழ்ச்சியும், அலங்கார திருமஞ்சனம் மற்றும் சேவை சாற்றுமுறையும், இரவு அனுமந்த வாகனத்தில் வீதி உலாவும், நாளை மறுநாள்(சனிக்கிழமை) காலை தங்க பல்லக்கு நிகழ்ச்சியும், மதியம் அலங்கார திருமஞ்சனமும், இரவு சேஷ வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது.

திருக்கல்யாண உற்சவம்

தொடா்ந்து வருகிற 10-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை நாச்சியார் திருக்கோலம், மதியம் அலங்கார திருமஞ்சனம், இரவு தங்க கருட சேவையும், 11-ந் தேதி(திங்கட் கிழமை) காலை சூரியபிரபை வாகனத்தில் வீதி உலா, மதியம் அலங்கார திருமஞ்சனம், இரவு யானை வாகனத்தில் வீதி உலா, 12-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை தங்கப்பல்லக்கில் வீதி உலா, மதியம் அலங்கார திருமஞ்சனம் மற்றும் திருக்கல்யாண உற்சவம், இரவு முத்துபல்லக்கில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது.

பின்னர் வருகிற 13-ந் தேதி(புதன்கிழமை) காலை தங்கப்பல்லக்கில் வீதி உலா, மதியம் சேவை சாற்றுமுறை, இரவு குதிரை வாகனத்தில் வீதி உலா, 14-ந் தேதி (வியாழக்கிழமை) காலை இந்திர விமானத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் வீதி உலா, 15-ந் தேதி காலை மங்களகிரி, மதியம் மகாசாந்தி ஹோமம் மற்றும் இரவு புஷ்பக விமானத்தில் வீதி உலா நடைபெறுகிறது.

விழாவை தொடர்ந்து வருகிற 16-ந் தேதி(சனிக்கிழமை) விடையாற்றி நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் கோவில் தேவஸ்தான ஏஜெண்டு கோலாகலன் என்ற கிருஷ்ணன் தலைமையில் விழா குழுவினர், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் முன்னின்று செய்து வருகின்றனர்.


Next Story