மழைநீர் தேங்குவதை தடுக்க உடனுக்குடன் நடவடிக்கை: அமைச்சர்கள் ஆய்வு
சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் அமைச்சர் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
சென்னை,
சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தேங்கும் வெள்ள நீரை உடனுக்குடன் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பகுதியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
சைதாப்பேட்டையில் ஜீனிஸ் சாலை, பஜார் சாலை, ஜோன்ஸ் சாலை, அண்ணா சாலை, ஈக்காட்டுதாங்கல் உள்வட்டசாலை, பூந்தமல்லி சாலை, கலைமகள் சாலை, அண்ணா பிரதான சாலை, காமராஜர் சாலை, பாரதிதாசன் சாலை மற்றும் துரைப்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு சென்று மழைநீர் தேங்கியுள்ளதா? என்பதையும், மழைநீர் வடிகால்வாயில் அடைப்பின்றி மழைநீர் வேகமாக ஓடுகிறதா? என்பதையும் ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
அடாது மழை பெய்தாலும், விடாது ஆய்வுப்பணி தொடரும். சைதாப்பேட்டை, ஜீனிஸ் சாலை பகுதியில் தேங்கும் மழை நீரை அகற்றும் பொருட்டு, பெரிய அண்ணா சாலையின் குறுக்கே டாக்டர் கலைஞர் பொன்விழா வளைவு அருகில் முன்வார்ப்பு கால்வாய் மற்றும் வடிகால் வழியாக அடையாறு ஆற்றுக்கு செல்லும் வகையில் ரூ.1.05 கோடியில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன. பருவ மழை காலம் முடிந்தபின், இப்பணி உடனே தொடங்கப்படும்.
பாதிப்பு வராது
உள்வட்டச் சாலையில், ஈக்காட்டுத்தாங்கலில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற சி.ஆர்.ஐ.டி.பி. திட்டத்தின் கீழ், 435 மீட்டர் நீளம் உள்ள மழைநீர் வடிகால் ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கால்வாயில் உள்ள மழைநீர் ஒரு பகுதி அடையாறுக்கும், மற்றொரு பகுதி சிட்கோ கால்வாய்க்கும் செல்ல ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது என்பதால் இப்பகுதியில் மழைநீர் தேங்க வாய்ப்பில்லை.
அண்ணா பிரதான சாலை, காமராஜர் சாலை, பாரதிதாசன் சாலைகளில் தேங்கும் மழைநீரை அடையாற்றுக்கு வெளியேற்றும் பொருட்டு, உள்வட்டச் சாலையில் மழைநீர் வடிகால் 810 மீட்டர் நீளத்திற்கு, ரூ.5.50 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த பகுதியில் மழைநீர் துரிதமாக வெளியேறிவிடும். பொது மக்களுக்கு மழைநீரால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
மழைநீர் கால்வாய்
சைதாப்பேட்டை, அண்ணா சாலையில், பஜார் சாலை முதல் ஜோன்ஸ் சாலை கடந்து, மாம்பலம் கால்வாய் வரை 200 மீட்டர் நீளத்திற்கு துண்டிக்கப்பட்ட இணைப்பாக இருந்த மழைநீர் வடிகால், ரூ.1 கோடி மதிப்பீட்டில் பணி தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. பெரிய அண்ணா சாலையில், கிண்டி, ஹப்லீஸ் ஓட்டல் அருகில், சென்ற ஆண்டு மிகுந்த மழைநீர் தேங்கி, போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக இருந்தது. இதனை தவிர்க்கும் பொருட்டு, 2 இடங்களில் சுமார் ரூ.1 கோடி மதிப்பில் முன்வார்ப்பு கால்வாய் பணிகள் நடைபெற்று வருகிறது.
உள்வட்டச் சாலையில், அடையாற்றுக்கு செல்லும் வடிகால் 100 மீட்டர் நீளம், பூந்தமல்லி சாலை சந்திப்பு முதல் கலைமகள் சாலை சந்திப்பு வரை பணி நடந்து வருகிறது. சைதாப்பேட்டையில், அண்ணா சாலையை ஒட்டியுள்ள பஜார் சாலையில், நீர் தேங்குவதை தவிர்க்க அண்ணா சாலையில் பஜார் சாலை முதல் ஜோன்ஸ் சாலை கடந்து மாம்பலம் கால்வாய் வரை 200 மீட்டர் நீளத்திற்கு துண்டிக்கப்பட்ட இணைப்பாக இருந்த மழை நீர் வடிகால் கால்வாயை இணைக்கும் பணியை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
உள்வட்டச் சாலையில் அடையாற்றுக்கு செல்லும் மழைநீர் வடிகாலை புனரமைக்கும் பொருட்டு 100 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்வாய் ரூ.1.10 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாய் பூந்தமல்லி சாலை சந்திப்பு முதல் கலைமகள் சாலை சந்திப்பு வரை உள்ள மழைநீரை அடையாற்றுக்கு வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சதுப்பு நிலப்பகுதி
சைதாப்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் ஆய்வு பணிகளை முடித்த பின்னர், துரைப்பாக்கத்திற்கு சென்று, சதுப்பு நிலப்பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
மழைநீர் வடிகால் அடைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.