உப்புக்கோட்டை பகுதியில்வெள்ளை ரக பட்டுக்கூடுகளுக்கு கடும் கிராக்கி:விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை


உப்புக்கோட்டை பகுதியில்வெள்ளை ரக பட்டுக்கூடுகளுக்கு கடும் கிராக்கி:விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

உப்புக்கோட்டை பகுதியில் வெள்ளை ரக பட்டுக்கூடுகளுக்கு கடும் கிராக்கி உள்ளது. ஆனால் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தேனி

உப்புக்கோட்டை, கோட்டூர், சின்னமனூர், கூடலூர், போடிமீனாட்சிபுரம், ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் மல்பெரி செடிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. இதில் கோலார் கோல்டு (மஞ்சள்), ஒயிட் (வெள்ளை) என இரு ரக பட்டுக்கூடுகள் அனைத்து பருவங்களிலும் உற்பத்தியாகும். ஆனால் வெள்ளை ரக பட்டுக்கூடுகளுக்கு சந்தைகளில் கடும் கிராக்கி உள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் ஒயிட் ரக பட்டுக்கூடு 80 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த பட்டுக்கூடு வளர்ப்புக்கு மிதமான பருவநிலை முக்கியமானதாகும். தேனி மாவட்டத்தில் உற்பத்தியாகும் வெள்ளைரக பட்டுக்கூடுகள் கோவை, ஒசூர், கர்நாடக மாநிலம் ராம்நகர் மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து உப்புக்கோட்டையை சேர்ந்த விவசாயி கூறுகையில், நான் ஒரு ஏக்கரில் மல்பெரி செடிகள் சாகுபடி செய்துள்ளேன். முட்டை வைத்த 30 நாட்களில் புழுக்கள் நன்றாக வளர்ந்து விடும். வழக்கமான நாட்களில் 80 முட்டைகள் வளர்த்தால் 60 முதல் 70 கிலோ வரை கூடுகள் உற்பத்தியாகும். தேனி மாவட்டத்தில் உள்ள பட்டுக்கூடு கொள்முதல் வியாபாரிகள் குறைவான விலைக்கு கேட்கின்றனர். இதனால் விவசாயிகள் ஒரு குழுவாக சேர்ந்து கோவை, கர்நாடக மாநிலம் ராம்நகரில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று நேரடியாக விற்பனை செய்து வருகிறோம். கடந்த மாதம் கிலோ ரூ.650-க்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளை ரக பட்டுக்கூடு தற்போது ரூ,450 முதல் ரூ,500 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் என்றார்.


Related Tags :
Next Story