மாவட்டத்தில், இதுவரைகலைஞர் உரிமை திட்டத்தில் 1.31 லட்சம் மனுக்கள் பதிவேற்றம்
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 லட்சத்து 31 ஆயிரம் மனுக்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக கலெக்டர் சரயு தெரிவித்தார்.
கலெக்டர் ஆய்வு
காவேரிப்பட்டணம் பேரூராட்சி 14-வது வார்டு கோவிந்தப்ப முதலி தெரு, 7-வது வார்டு பன்னீர்செல்வம் பகுதிகளில் உள்ள ேரஷன் கடைகளில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் முகாம் நடந்தது. இந்த முகாமை கலெக்டர் சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் கூறியதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 பெறுவதற்கான விண்ணப்பங்கள் கடந்த 20-ந் தேதி முதல் ஒவ்வொரு ரேஷன் கடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம், டோக்கன் ஆகியவை வழங்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றும் செய்யும் விண்ணப்ப பதிவு முகாம் கடந்த 24-ந் தேதி தொடங்கியது. முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 4-ந் தேதி வரையும், 2-ம் கட்ட முகாம் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையும் நடைபெற உள்ளது.
1.31 லட்சம் மனுக்கள் பதிவேற்றம்
விண்ணப்பம் பதிவு செய்யும்போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, மின்கட்டண ரசீது, வங்கி புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்ப பதிவு முகாமில் ஒரே நேரத்தில் பலர் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் அனைத்து பெண்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும். விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடைபெறும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 24-ந் ேததி முதல் 26-ந் தேதி வரை 8 வட்டங்களில் உள்ள 584 ரேஷன் கடை பகுதிகளில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 404 மனுக்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது காவேரிப்பட்டணம் பேரூராட்சி செயல் அலுவலர் சாம் கிங்ஸ்டன், கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் சுப்ரமணி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.