ஒரே நாளில் ரூ.30 உயர்ந்தது- ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை; இல்லத்தரசிகள் அதிர்ச்சி
ஒரே நாளில் ரூ.30 உயர்ந்து ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையானதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒரே நாளில் ரூ.30 உயர்ந்து ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையானதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
விலை உயர்வு
கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. பெரும்பாலான காய்கறிகளின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை உயர்ந்துவிட்டது. இதனால் இல்லத்தரசிகள் சமையலில் காய்கறிகளின் அளவுகளை குறைத்து விடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு விலை உயர்வு காணப்படுகிறது. சமையலுக்கு தேவைப்படும் முக்கிய காய்கறிகளில் தக்காளியும் உள்ளது.
ஈரோட்டில் கடந்த வாரம் வரை ஒரு கிலோ தக்காளி ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன்பிறகு படிப்படியாக தக்காளியின் விலை உயர தொடங்கியது. நேற்று முன்தினம் ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனையானது. ஆனால் நேற்று ஒரே நாளில் ரூ.30 விலை உயர்ந்து ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விலை போனது. இதனால் காய்கறிகள் வாங்க வந்த இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
வரத்து குறைந்தது
தக்காளி வரத்து குறைந்ததன் காரணமாக விலை உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஈரோடு தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு தாளவாடி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பெட்டிகள் வரை தக்காளிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. ஆனால் கடந்த ஒரு மாதமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்தது. நேற்று 1,000 பெட்டிகள் தக்காளி மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. விலை திடீரென உயர்ந்ததால் கிலோ கணக்கில் வாங்க வந்த பொதுமக்களும் குறைந்த அளவில் மட்டுமே வாங்கி சென்றனர்.
இதேபோல் ஈரோடு உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.86-க்கு விற்பனையானது.