நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை தி.மு.க. தொடர்ந்து போராடும்-உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு
நீட் தேர்வை ரத்து செய்யும் வரை தி.மு.க. தொடர்ந்து போராடும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் கூறினார்.
நீட் தேர்வை ரத்து செய்யும் வரை தி.மு.க. தொடர்ந்து போராடும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் கூறினார்.
உண்ணாவிரத போராட்டம்
நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நீட் தேர்வு ரத்து செய்யாத மத்திய அரசை கண்டித்தும், தமிழக கவா்னர் ரவியை கண்டித்தும் சிவகங்கை மாவட்ட தி.மு.க.இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி சார்பில் சிவகங்கையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. உண்ணாவிரத போராட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகினி செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கதிர் ராஜ்குமார், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் மருத்துவர் குமரேசன், மாநில மாணவரணி துணை செயலாளர் பூரணசங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர் இளைஞரணி அமைப்பாளர் அயூப்கான் வரவேற்று பேசினார். முன்னதாக சிவகங்கை சிவன் கோவில் திடலில் இருந்து மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் நாகினி செந்தில்குமார் தலைமையில் தி.மு.க.வினர் பேரணியாக அரண்மனை முன்பு வந்தடைந்தனர்.
கடுமையாக எதிர்த்து வருகிறது
உண்ணாவிரதத்தை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.
இந்த உண்ணாவிரதத்தை மாலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கலந்து கொண்டு முடித்து வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து நீட் தேர்வை தி.மு.க. கடுமையாக எதிர்த்து வருகிறது. நீட் தேர்வு பல உயிர்களை பழிவாங்கும் கொடிய உயிர்க்கொல்லியாக உள்ளது. பிளஸ்-2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று மேல் படிப்பு முடித்த தமிழர்கள் இன்று இந்தியா மட்டுமின்றி பல உலக நாடுகளில் பல்வேறு துறைகளில் முதன்மையானவர்களாக இருந்து சாதனை படைத்து வருகின்றனர்.
தொடர்ந்து போராடும்
நீட் தேர்வால் இதுவரை 17 பேரின் உயிர்கள் பறிபோயிருக்கிறது. இவர்கள் அனைவரும் பிளஸ்-2-வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்கள். தி.மு.க. நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து போராடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் முன்னாள் அமைச்சர் தென்னவன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, ஜோன்ஸ் ரூசோ, முன்னாள் எம்.எல்.ஏ. மதியரசன், மகளிரணி அமைப்பாளர் பவானிகணேசன், மானாமதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பொற்கோ கல்லல் கிட்டு, மதிவாணன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.