துப்புதுலங்காத வழக்குகள்குறித்து போலீஸ் ஐ.ஜி. ஆய்வு
திண்டுக்கல் மாவட்டத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் துப்புதுலங்காத வழக்குகள் குறித்து போலீஸ் ஐ.ஜி. மல்லிகா ஆய்வு செய்தார்.
சிறப்பு புலனாய்வு படை
தமிழகம் முழுவதும் நீண்டநாட்களாக துப்புதுலங்காமல் நிலுவையில் இருக்கும் கொலை, கொள்ளை வழக்குகளை விசாரிக்க, டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்டந்தோறும் ஒரு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு புலனாய்வு போலீஸ் படை அமைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல் நகர துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு புலனாய்வு போலீஸ் படை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் திண்டுக்கல் வடக்கு இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் சித்திக் மற்றும் போலீசார் என 10 பேர் இடம்பெற்று இருக்கின்றனர்.
போலீஸ் ஐ.ஜி. ஆய்வு
இந்த சிறப்பு புலனாய்வு போலீஸ் படையினர் மாவட்டத்தில் நீண்டநாட்களாக துப்புதுலங்காமல் இருக்கும் கொலை, கொள்ளை வழக்குகளை விசாரித்து வருகின்றனர். அதில் 7 கொள்ளை வழக்குகளில் துப்புதுலக்கி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து, கொள்ளை போன பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் துப்புதுலங்காத வழக்குகளின் விசாரணை தொடர்பாக ஆய்வு செய்வதற்கு, போலீஸ் ஐ.ஜி.மல்லிகா நேற்று திண்டுக்கல் வந்தார். இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், ஐ.ஜி.யை வரவேற்றார். இதையடுத்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து, துப்புதுலங்காத வழக்குகள் தொடர்பாக ஐ.ஜி. ஆய்வு செய்தார்.
அப்போது சிறப்பு புலனாய்வு படையினர் விசாரணைக்கு எடுத்த வழக்குகள், அதில் இதுவரை துப்புதுலக்கிய வழக்குகள் விவரங்களை கேட்டறிந்தார். மேலும் மீதமுள்ள வழக்குகளையும் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யும்படி உத்தரவிட்டார்.