வணிகர்களுக்கு புதிய சமாதான திட்டத்துக்கு சங்கங்கள் வரவேற்பு


வணிகர்களுக்கு புதிய சமாதான திட்டத்துக்கு சங்கங்கள் வரவேற்பு
x

வணிகர்களுக்கான புதிய சமாதான திட்டத்தை வணிகர் சங்கங்கள் வரவேற்று உள்ளன. தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என கருத்து தெரிவித்து உள்ளன.

மதுரை

புதிய சமாதான திட்டம்

சட்டசபையில், வணிகர்களுக்கு புதிய சமாதானத் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி ரூ.50 ஆயிரம் வரையிலான வணிக வரி, வட்டி, நிலுவைத்தொகை தள்ளுபடி செய்யப்பட உள்ளது.

இந்த திட்டம் குறித்து வணிகர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:-

முதல்-அமைச்சருக்கு நன்றி

தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் சங்க மாநில தலைவர் திருமுருகன்:

வணிகர்களின் நலனில் அக்கறை கொண்டு, புது விதமாக யோசனை செய்து புதிய வரி நிலுவைத் தொகை சமாதானத் திட்டத்தை சட்டசபையில் அறிவித்துள்ள முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மூர்த்தி ஆகியோருக்கு எங்கள் சங்கத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இதுபோல், சிறு தொழில்கள் பாதிக்க காரணமாக இருக்கும், மின்கட்டண உயர்வையும் குறைக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுத்தால், வணிகர்களின் தொழில் இன்னும் அதிகமாகும். தமிழகம் தொழில் வளர்ச்சியில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கும்.

அரசுக்கு வருவாய் கிடைக்கும்

தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் வேல்சங்கர், கவுரவ ஆலோசகர் ஜெயபிரகாசம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சரக்கு மற்றும் ேசவை வரி அமலுக்கு வருவதற்கு முன், நடைமுறையில் இருந்த மதிப்பு கூட்டு வரி சட்டத்தில் உள்ள நிலுவைகளை வசூலிக்க வணிகர்கள், தயாரிப்பாளர்கள் சார்பாக சமாதான திட்டம் கொண்டு வர வேண்டும் என்று எங்கள் சங்கத்தின் சார்பாக 2020 ஆண்டு முதல் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தோம். எங்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று சமாதான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த திட்டம் காலதாமதமாக கொண்டு வந்தாலும், மிக சிறப்பான திட்டமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு வர வேண்டிய ரூ.25 ஆயிரம் கோடியில் பெரும்பகுதி வரும் என்று நம்புகிறேன். இந்த திட்டத்தால் ஆயிரக்கணக்கான வணிகர்கள், தயாரிப்பாளர்கள் பலன் அடைவதுடன் அரசிற்கு கிடைக்க வேண்டிய வருவாயும் கிடைக்கும். எங்களின் நியாயமான கோரிக்கைகளை கேட்டறிந்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story