கல்லலை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா-யூனியன் கூட்டத்தில் தலைவர் சொர்ணம் அசோகன் தகவல்
கல்லலை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது என யூனியன் கூட்டத்தில் தலைவர் சொர்ணம் அசோகன் தெரிவித்தார்.
காரைக்குடி
கல்லலை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது என யூனியன் கூட்டத்தில் தலைவர் சொர்ணம் அசோகன் தெரிவித்தார்.
யூனியன் கூட்டம்
கல்லல் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் அதன் தலைவர் சொர்ணம் அசோகன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் நாராயணன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர் அழகு மீனாள், மேலாளர் சுந்தரம், மாவட்ட கவுன்சிலர் மஞ்சரி லெட்சுமணன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
முத்தழகு:- அதிகரத்தில் உயர்நிலைப் பள்ளிக்கு செல்லும் சேதமடைந்த சாலையினை உடனடியாக சீரமைக்க வேண்டும். மருதுபாண்டியன்:- குன்றக்குடி பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் திருத்தலமாகும். அங்கு குப்பைகளை அகற்ற ஊராட்சி அலுவலகத்திற்கு வாகன வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் பலரால் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகிறது. எனவே உடனடியாக குன்றக்குடி ஊராட்சியின் தூய்மை பணிக்கு வாகன வசதி ஏற்படுத்த வேண்டும். சையது அபுதாஹிர்:- கண்மாய் மடைகள், கழுங்குகளை சீரமைத்து நீரினை சேமிக்க உதவ வேண்டும்.
ஆக்கிரமிப்பு
ஆரோக்கியம்:- ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பணிகளை மேற்கொள்வதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க வேண்டும். சங்கீதா:- குருந்தம்பட்டு குளத்தை சீரமைக்க வேண்டும். அழகப்பன்:- கோவிலூர் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். எனது பகுதியில் கட்டப்பட்டு 25 ஆண்டுகள் ஆன குழும வீடுகள் சேதம் அடைந்து விட்டன. அவற்றை மராமத்து செய்ய வேண்டும்.
சங்கு உதயகுமார்:- காரைக்குடி-கல்லல், புரண்டி, கள்ளிப்பட்டு மற்றும் காரைக்குடி-கல்லல் குருந்தம்பட்டு, வேப்பங்குளம் வழித்தடத்தில் செல்லும் அரசு பஸ்கள் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கு வசதியாக காலை, மாலை நேரங்களில் இயக்க வேண்டும்.
நமக்கு நாமே திட்டம்
நாராயணன் துணைத்தலைவர்:- கண்டரமாணிக்கம், பெரிச்சிகோயில், தெற்கு நயினார்பட்டி, ஊடகம்பட்டி, சாத்தனேந்தல் சொக்கநாதபுரம், பட்டமங்கலம், திருக்கோஷ்டியூர் செல்லும் சாலை சேதமடைந்து விபத்துகளுக்கு வழி வகுக்கிறது. எனவே இதனை சீரமைக்க வேண்டும்.
ஆணையாளர் செழியன்:- பழுதடைந்த குழும வீடுகளை கணக்கீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு, மராமத்து செய்யப்படும். பழுதடைந்த சாலைகளை முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் நமக்கு நாமே திட்டத்தை பயன்படுத்தி திட்ட பணிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்.
பேட்டரி வாகனம்
ஒன்றிய தலைவர் சொர்ணம் அசோகன்:- தூய்மை பணிகள் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளின் சுகாதார பணிகளுக்கு அரசால் பேட்டரி வாகனம் வழங்கப்பட உள்ளது. தூய்மை பணிகளுக்காக ஒன்றிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்நிலைகளை சீரமைக்கும் பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். தமிழக கூட்டுறவு துறை அமைச்சரின் பரிந்துரையின் பேரில் நமது ஒன்றியத்திற்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திட முன்வந்துள்ளது. நிதி கிடைத்தவுடன் திட்டப்பணிகள் விரைவு படுத்தப்படும்.
மேலும், கல்லலை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைக்க வேண்டும் என அரசுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள் அரசின் பரிசீலனையில் உள்ளது. 5-ந் தேதி சிவகங்கைக்கு வருகை தரும் முதல்-அமைச்சரை சிறப்பாக வரவேற்க வேண்டும். இவ்வாறு கூட்டம் நடை பெற்றது.