குடிநீர், மின்சாரம் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை- ஒன்றியக்குழு கூட்டத்தில் தகவல்
கோடை காலத்தில் குடிநீர், மின்சாரம் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கொரடாச்சேரி ஒன்றியக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கோடை காலத்தில் குடிநீர், மின்சாரம் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கொரடாச்சேரி ஒன்றியக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஒன்றியக்குழு கூட்டம்
கொரடாச்சேரி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் உமாப்பிரியா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாலச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஸ்வநாதன், முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீர்மானங்களை உதவியாளர் மகேந்திரன் படித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
நாகூரான் (அ.தி.மு.க.):- மேல மற்றும் கீழ உத்தரங்குடி மயானத்தில் சாலை மற்றும் மயான கொட்டகை அமைத்து தர வேண்டும். அபிவிருத்தீஸ்வரம் மயானசாலை, ஊர்குடி அய்யனார் கோவில் தெருவில் சாலைகளை அமைக்க வேண்டும்.
சத்தியேந்திரன் (தி.மு.க.):- எண்கண் ஊராட்சியில் ஈமகிரியை கட்டிடம் கட்ட வேண்டும்.
மின் விளக்குகள்
ஏசுராஜ் (அ.தி.மு.க.):- தியாகராஜபுரம் ஆதி திராவிடர் தெரு சாலை, நீலக்குடி சுடுகாடு மயான கொட்டகை, மயானம் செல்லும் சாலையில் மின் விளக்குகளை அமைக்க வேண்டும்.
வாசு (தி.மு.க.):- அகரத்திருநல்லூர் அக்ரகார தெருவில் சாலையை சீரமைக்க வேண்டும். காட்டூரில் பழுதடைந்த சமுதாயகூடத்தை சீரமைக்க வேண்டும்.
கவிதா (இந்திய கம்யூனிஸ்டு):- திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் தைராய்டு நோய்க்கு மருந்துகளை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்.
உமாமகேஸ்வரி (தி.மு.க.):- தியாகராஜபுரம் ஊராட்சி சிராய்குடி மயான சாலை அமைக்க வேண்டும்.
மின்சாரம்- குடிநீர்
பாலச்சந்திரன் (துணைத்தலைவர்):- உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி ஆதாரத்தை வைத்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் மற்ற பணிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
உமாப்பிரியா (தலைவர்):-
கோடை காலம் வருவதால் மக்களின் அடிப்படை தேவயைான குடிநீர், மின்சாரம் போன்றவற்றை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். படித்துறை மற்றும் வாய்க்கால் மதகு சீரமைப்பு பணிகளை ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதத்தில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. படித்துறை, கல்வெட்டு, தேவைப்படும் உறுப்பினர்கள் உடனே தெரிவிக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தன் நன்றி கூறினார்.