கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்
கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொள்ளிடம் ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கொள்ளிடம்:-
கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொள்ளிடம் ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஒன்றியக்குழு கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றிய அலுவலக அவை கூடத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் பானு சேகர், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தம் வரவேற்றார். இளநிலை உதவியாளர் சரத்குமார் அறிக்கை படித்தார். பின்னர் கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-
குடிநீர் கிடைக்க நடவடிக்கை
அங்குதன் (தி.மு.க.):- கூழையார் கிராமத்தில் சேதம் அடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.
லட்சுமி பாலமுருகன் (தி.மு.க.):- புளியந்துறை, காட்டூர் ஆகிய கிராமங்களில் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் வரவில்லை. இங்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லண்டன் அன்பழகன் (பா.ம.க.):- குன்னம் ஊராட்சியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. அங்கு குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும். பட்டவிளாகம் கிராமத்தில் குடிநீர் பம்பு அமைக்க வேண்டும்.
அடிப்படை வசதிகள்
சிவபாலன் (பா.ம.க.):- கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை சீரமைக்க வேண்டும். அளக்குடி ஊராட்சி நரியன் தெரு, நாணல் படுகை ஆகிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.
காமராஜ் (விடுதலை சிறுத்தைகள் கட்சி):- ஆர்ப்பாக்கம் ஊராட்சியில் பின்னக்கொல்லை கிராமத்தில் சாலை, தெருவிளக்கு, குடிநீர் இன்றி மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். இங்கு அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பச்சை பெருமாநல்லூர் கிராமத்தில் காளியம்மன் கோவில் தெரு, தேவநல்லூர், மகாராஜபுரம், கிராமங்களில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதம் அடைந்த ரேஷன் கடை
ரீகன் (அ.தி.மு.க.):- பழையபாளையம் ஊராட்சியில் கொடக்கார மூலை கிராமத்தில் சேதம் அடைந்த ரேஷன் கடையை சீரமைக்க வேண்டும்.
மஞ்சுளாதேவி (தி.மு.க.):- திருமுல்லைவாசல் ஊராட்சி சுனாமி நகர், ராதாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.
ஒன்றியக்குழு தலைவர்:- கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அளக்குடி கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க வெள்ளைமணல் கிராமத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் நிரந்தரமாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜ், ஒன்றிய பொறியாளர் பலராமன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொறியாளர் பவளச்சந்திரன் நன்றி கூறினார்.