பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில்கூடுதலாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்


பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில்கூடுதலாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 31 Dec 2022 12:45 AM IST (Updated: 31 Dec 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் கூடுதலாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருவாரூர்

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் கூடுதலாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஒன்றியக்குழு கூட்டம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

பாரதிமோகன் (தி.மு.க.):- 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ஊராட்சி பகுதிகளுக்கு ஒதுக்கக்கூடிய நிதியின் அளவை அதிகப்படுத்த வேண்டும். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பலன் பெறும் பயனாளிகள் தங்களுடைய வங்கி கணக்கை ஒரு குறிப்பிட்ட வங்கியில் வைக்க வேண்டும் என கூறுகிறார்கள்.

ஆனால் அதில் 100 ரூபாய் இருப்பு இருக்கும்போது அந்த கணக்கு எண் வேறொருவருக்கு போய் சேர்ந்து விடுகிறது. அதில் அரசு சார்பில் போடப்படும் பணமானது பயனாளிக்கு கிடைப்பதில்லை. எனவே அரசு நிதி உதவி உரியவர்களுக்கு முறைப்படி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலை சேதம்

ஜெயக்குமார் (அ.தி.மு.க.):- உள்ளிக்கோட்டை- மதுக்கூர் இணைப்பு சாலை சேதம் அடைந்துள்ளது. அதனை நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்க ஊராட்சி தீர்மானம் நிறைவேற்றி கொடுத்தும் இதுவரை சாலைகள் போடப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும். அதேபோன்று உள்ளிக்கோட்டை- துளசேந்திரபுரம் சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும்.

வீடு ஒதுக்கீடு

கோவில் வினோத் (அ.தி.மு.க.):- பரவாக்கோட்டையில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2 பேருக்கு மட்டுமே வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகம் பேருக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

பூபதி (இந்திய கம்யூனிஸ்டு):-

ஓவர்ச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும். திருராமேஸ்வரம் ஊராட்சிக்கு அங்கன்வாடி கட்டிடமும், அங்காடியும் ஏற்படுத்தி தர வேண்டும்.

ஒன்றியக்குழு தலைவர் மனோகரன்:- திருராமேஸ்வரம் ஊராட்சிக்கு அங்கன்வாடி கட்டிடமும், அங்காடியும் விரைவில் அமைத்து தரப்படும். இதற்காக தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டத்தில் கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பையும் சேர்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story