அ.தி.மு.க. பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது ஏன்? அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா பதில்
பொது சிவில் சட்டத்துக்கு எதிரான அ.தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்தும் தெரிவித்திருக்கிறார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா.
ஹலோ எப்.எம்.மில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் 'ஸ்பாட்லைட்' நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது. அரசியல் பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று, இன்றைய அரசியல் நிகழ்வுகள், சமூக நோக்கங்கள் குறித்து விவாதிக்கின்றனர். அந்த வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாக உள்ள ஸ்பாட்லைட் நிகழ்ச்சியில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா கலந்து கொண்டு பேசுகிறார்.
அதில் அவர், அ.தி.மு.க.வில் எந்த குழப்பமோ, தடுமாற்றமோ இல்லை என்றும், ஒரு கோடியே 60 லட்சம் உறுப்பினர்களை கொண்டுள்ள கட்சியானது எடப்பாடி பழனிசாமி தலைமையில் விரைவில் 2 கோடியை எட்ட உள்ளது என்றும் பேசியுள்ளார். தேர்தல் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி கூறியதில் எந்த முரண்பாடுகளும் இல்லை என்று கூறியிருக்கும் அவர், அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கவர்னர் சனாதனம் பற்றி பேசுவது காலத்துக்கு ஒவ்வாத விஷயம் என்று பேசியிருக்கும் ரமணா, பொது சிவில் சட்டத்துக்கு எதிரான அ.தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்தும் தெரிவித்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடருமா? அண்ணாமலையுடன் தொடரும் மோதல், எதிர்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெறுமா? ஓ.பன்னீர்செல்வம் மகன் தேர்தல் வெற்றி செல்லாது என்ற தீர்ப்பு உள்பட தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்தும் நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.