கட்டளை மேட்டு வாய்க்காலில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம் மீட்பு


கட்டளை மேட்டு வாய்க்காலில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம் மீட்பு
x

கட்டளை மேட்டு வாய்க்காலில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம் கிடந்தது. அதனை போலீசார் மீட்டு அடக்கம் செய்தனர்.

புதுக்கோட்டை

திருச்சி கே.கே.நகரில் இருந்து உடையான்பட்டி வழியாக கட்டளை மேட்டு வாய்க்கால் விராலிமலை ஒன்றியம் மாத்தூர் ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளின் நுழைந்து சூரியூர் வரை செல்கிறது. இந்த வாய்க்காலில் கே.கே.நகர் உடையான்பட்டி அருகே நேற்று முன்தினம் காலை 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்து வந்ததாகவும் அந்த உடலானது வாய்க்காலில் உள்ள முள்ளில் சிக்கி இருப்பதாக அப்பகுதியினர் ஏர்போர்ட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏர்போர்ட் போலீசார் அந்த உடல் இருக்கும் பகுதியானது நவல்பட்டு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியாக இருக்குமோ? என சந்தேகத்தின் அடிப்படையில் நவல்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நவல்பட்டு போலீசார் அந்தப் பகுதியானது மாத்தூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதி என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாசில்தார் வரவழைக்கப்பட்டு இது குறித்து ஆய்வு செய்ததில் அந்த உடல் கிடந்த பகுதி மாத்தூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதி என உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து நவல்பட்டு போலீசார் மாத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் மாத்தூர் போலீசார் எங்களது பகுதி அங்கு இல்லை என்று கூறி வாய்க்காலில் மிதந்த அடையாளம் தெரியாத உடலை மீட்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு உடல் கிடக்கும் இடமானது மாத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி தான் என்று உறுதியாக கூறியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் நேற்று காலை வந்து வாய்க்காலில் தேங்கியிருந்த அடையாளம் தெரியாத முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மாத்தூர் போலீசார் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் அந்த முதியவரின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் திருச்சி அண்ணா நகரில் உள்ள பொது மயானத்தில் அடக்கம் செய்தனர்.


Next Story