வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்


வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 26 Oct 2023 12:15 AM IST (Updated: 26 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சுயதொழில் தொடங்க விரும்பமுள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்தார்

சிவகங்கை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:- படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதன் மூலம் அவர்கள் சமூக பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடையும் நோக்கில் தமிழக அரசால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, மாவட்ட தொழில் மையம் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.15 லட்சம் வரையில் வங்கிகடன் உதவியும், திட்ட மதிப்பில் 25 சதவீதம், அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் வரை அரசு மானியமாக வழங்குகிறது.

கல்வித்தகுதி

இத்திட்டத்தின் கீழ்பயன்பெற குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவு ஆண்கள் 18 வயது முதல் 45 வயது வரையும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 18 வயது முதல் 55 வயதிற்கு உட்பட்டு இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தில் ஜவுளி, ஆயத்த ஆடைகள் விற்பனை, எலெக்ட்ரிக்கல் கடை, மளிகை கடை, அரிசி கடை, சுவீட் ஸ்டால், செல்போன் விற்பனை, செப்பல் கடை, ஹார்டுவேர் மார்ட், பெயிண்ட் கடை, மெடிக்கல் ஸ்டோர், இருசக்கர வாகன உதிரிபாகம் விற்பனை, ஸ்டேசனரி கடை போன்ற விற்பனை தொழில்கள் தொடங்கலாம்.

விண்ணப்பிக்கலாம்

இந்த திட்டத்தில் தொழில் செய்ய ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியில் உள்ள UYEGP விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய இணைப்புகளை பதிவேற்றம் செய்து வேண்டும்.

மேலும், பெறப்பட்ட விண்ணப்பத்தின் இரண்டு பிரதிகளை உரிய ஆவணங்களுடன் மாவட்ட தொழில்மையத்தில் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story