கண்டுகொள்ளப்படாத ஜெயங்கொண்டம் நவீன எரிவாயு தகனமேடை


கண்டுகொள்ளப்படாத ஜெயங்கொண்டம் நவீன எரிவாயு தகனமேடை
x

ஜெயங்கொண்டம் நவீன எரிவாயு தகனமேடை பழுதடைந்த நிலையில் கண்டுகொள்ளப்படாமல் உள்ளதால் திறந்தவெளியில் எரியூட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், அதிக செலவு ஆவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அரியலூர்

நவீன எரிவாயு தகனமேடை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து பணிமனை அருகே செந்துறை சாலையில் மீனாம்பாடி சுடுகாட்டில் கடந்த 2016-2017-ம் ஆண்டில் நவீன எரிவாயு தகன மேடை கட்ட திட்டமிடப்பட்டு, பின்னர் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் முறையாக கட்டப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் மின்தகன மேடை கட்டி ஓராண்டு ஆகியும் செயல்படாமல் இருந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து கொரோனா காலகட்டத்தின்போது உடல்களை தகனம் செய்வதற்காக கடந்த 2021-ம் ஆண்டு மின்தகன மேடை திறக்கப்பட்டது. கொரோனா மற்றும் உடல்நலக்குறைவால் இறந்தவர்களின் உடல்கள் இங்கு தகனம் செய்யப்பட்டது. இருப்பினும், இது நீண்ட காலம் நீடிக்கவில்லை. எந்திரம் பழுதானதால், கடந்த 6 மாதங்களாக செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மீண்டும் பழைய நிலைக்கு திறந்தவெளியில் தகனம் செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் செலவு அதிகரிப்பு மற்றும் கால தாமதம் உள்ளிட்டவை ஏற்படுகிறது. எனவே விரைவில் நவீன மின் தகனமேடையை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திறந்தவெளியில்...

ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ராம்குமார் கூறுகையில், கடந்த 6 மாதங்களாக மின் தகனமேடை செயல்படவில்லை. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது அவர்கள் எலக்ட்ரிக் சம்பந்தமாக பழுது ஏற்பட்டுள்ளதாகவும், நீர்மோட்டார் பழுது, கேட்வால்வு பழுது உள்ளிட்ட பழுது காரணமாக நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து நகராட்சிக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் திறந்தவெளியில் தகனம் செய்வதால் செலவு கூடுதல் ஆவதுடன் அருகிலேயே பள்ளி, கல்லூரிகள் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது என்றார்.

எரியூட்டுவதில் சிரமம்

செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் கூறுகையில், பல்வேறு முயற்சிகளுக்கு பின், இந்த மின் தகனமேடை இங்கு கொண்டுவரப்பட்டது. இங்கு ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதியில் 21 வார்டுகளுக்கும், கொரோனா காலத்தில் இறந்தவர்கள் உடலை எரியூட்டுவதற்கு மிகவும் சுலபமாக இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஓராண்டு மட்டுமே செயல்பட்டது. அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் பராமரிப்பின்மையால் கடந்த 6 மாதங்களாக செயல்படாமல் உள்ளது. இதனால் மக்கள் மீண்டும் பழைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் அடிக்கடி ஆட்கள் மற்றும் விறகு தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதுதவிர பழைய தகன செலவு மின் தகனத்தை விட (ரூ.3,000) அதிகம். மேலும் இங்கு கால தாமதம் உள்ளது. மின் தகனமேடை வசதி உள்ளதால், எங்களின் அனைத்து பணிகளும் மிகவும் எளிதாக உள்ளது. நகராட்சிக்கு ஒருமுறை தெரிவித்து பணம் செலுத்தினால் போதும். இதில், மாசு பிரச்சினை, கால தாமதம் உள்ளிட்டவை இல்லை. எனவே, அதிகாரிகள் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்தகன மேடையை மீண்டும் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தற்போது மழைக்காலம் என்பதால் இறந்தவர்களின் உடல்களை எரியூட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மின் தகனமேடையை உடனடியாக பழுது நீக்கி மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

சுகாதார சீர்கேடு

தீரன்நகரை சேர்ந்த ராமர் கூறுகையில், எங்களது குடும்பம் மிக ஏழ்மையான குடும்பம். இதுபோல் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான ஏழ்மையான குடும்பங்கள் உள்ளன. இந்த மின் தகனமேடை ஏழைகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தது. கொரோனா காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம். அவர்களை உறவினர்கள் பார்க்கக்கூட அனுமதிக்காமல் நேராக இறந்தவரின் உடலை இடுகாட்டிற்கு கொண்டு சென்று மின் தகனமேடையில் வைத்து எரித்து விடுவார்கள். அதனால் பிறருக்கு நோய்த்தொற்று பரவாத சூழல் இருந்தது. தற்போது பல்வேறு நோய்களால் இறந்து விடுகின்றனர். இவர்களை திறந்த வெளியில் எரியூட்டுவதால் புகை நிறைந்து அப்பகுதியில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் அந்தப் பகுதியையொட்டியே அரசு கல்லூரி, பள்ளி, அரசு பணிமனை, தனியார் பள்ளி ஆகியவை உள்ளன. இதனால் அவ்வழியாக வரும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த மின் தகனமேடையை உடனடியாக முன்பு இயங்கியது போல் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.


Next Story