அனைத்து வீடுகளுக்கும் 3 மாத காலத்திற்குள் பாதாள சாக்கடை இணைப்பு; கலெக்டர் தகவல்
திருச்செந்தூர் நகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 3 மாத காலத்திற்குள் பாதாள சாக்கடை திட்ட இணைப்பு வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் நகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 3 மாத காலத்திற்குள் பாதாள சாக்கடை திட்ட இணைப்பு வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
ஆய்வுக்கூட்டம்
திருச்செந்தூர் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நகராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன், நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், நகராட்சி ஆணையர் வேலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகராட்சி, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கலெக்டர் ஆய்வு
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவில் பாதாள சாக்கடை திட்டத்தில் குடியிருப்புகளுக்கான இணைப்பு வழங்கப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோல் ஆலந்தலை அருகே தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள 512 அடுக்குமாடி குடியிருப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர் பாரதியார் தெருவை சேர்ந்த தாய், தந்தையரை இழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் 4 பேருக்கு தோப்பூரில் இலவச வீட்டுமனை பட்டாவையும், பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு கட்டும் திட்ட மானியத்திற்கான ஆணையையும் கலெக்டர் வழங்கினார்.
பாதாள சாக்கடை இணைப்பு
பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் கூறியதாவது:-
திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தில் 4 ஆயிரத்து 312 வீடுகளுக்கு இணைப்பு வழங்க வேண்டியிருந்தது. வீட்டு இணைப்புகளுக்கு இலவசமாக கட்டணமில்லாமல் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வீடுகளை பாதாள சாக்கடை திட்டத்தில் இணைக்க 18 நபர்கள் கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டது. தற்போது தினமும் 25 முதல் 30 வீடுகள் இணைக்கப்படுகிறது. கடந்த 15 நாட்களில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் இணைக்கப்பட்டுள்ளது. இதுவரை 700 வீடுகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்திற்குள் 1000 வீடுகளை இணைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதத்திற்குள் 4 ஆயிரம் வீடுகளுக்கும் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குடிநீர் வழங்க நடவடிக்கை
திருச்செந்தூர் நகர் பகுதியில் சுனாமி காலணி அருகில் 512 தொகுப்பு குடியிருப்புகள் நகர்ப்புற வாழ்வாதார நிறுவனம் மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகளுக்கு எல்லப்பநாயக்கன்குளத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 வாரத்திற்குள் பணிகள் முடிந்து குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட பின்னர் மக்கள் குடியமர்த்தப்படுவார்கள்.
மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் சீவலப்பேரி, வல்லநாடு, பொன்னன்குறிச்சி, குரங்கணி ஆகிய பகுதிகளில் உள்ள நீரேற்றும் நிலையங்களில் உள்ள மோட்டார்கள் 24 மணி நேரமும் இயங்க வேண்டும். எனவே தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மின்வாரியத்தினரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் காலங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படாதவாறு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாத்தான்குளம் பகுதியில் தண்ணீர் பிரச்சினை என்று வாட்ஸ் அப்பில் புகார் வந்தது. அப்பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
அப்போது, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், திருச்செந்தூர் தாசில்தார் வாமணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப்பொறியாளர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.