எந்த சூழ்நிலையிலும் தமிழக மண்ணில் வன்முறை கலாசாரத்தை அனுமதிக்கமாட்டோம் - கமல்ஹாசன்
எந்த சூழ்நிலையிலும் தமிழக மண்ணில் வன்முறை கலாசாரத்தை அனுமதிக்கமாட்டோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் பா.ஜ.க., இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை சேர்ந்தவர்களின் வீடுகள், வாகனங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு, தீவைப்பு சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. ஒரே நாளில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான போலீசார் மற்றும் அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களில் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள யாரும் இதுபோன்ற வன்முறையை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கமாட்டார்கள். இத்தகைய சம்பவங்கள் மிகப்பெரிய அளவில் கலவரங்களை தூண்டிவிடக்கூடிய அபாயம் மிக்கவை.
மக்கள் நீதி மய்யம், பா.ஜ.க. ரசிகர்கள் அல்ல. ஆனால் ஜனநாயகத்தின் தொண்டர்கள். அரசியல் மக்களுக்கானது. வன்முறையால் அதை வெல்ல முற்படுவது மிருக குணம். மிருக குணம் கொண்டோர் யாராக இருந்தாலும், அவர்கள் நாட்டில் திரியவேண்டியவர்கள் அல்ல. நாங்கள் வன்முறையை கைக்கொள்ளும் எத்தரப்புக்கும் எதிரானவர்கள். வருகிற காந்தி ஜெயந்தியை ரத்தத்தால் கொண்டாடலாம் என நினைப்பவர்களை மக்கள் நீதி மய்யமும், நானும் வன்மையாக எதிர்க்கிறோம்.
எந்த சூழ்நிலையிலும் தமிழக மண்ணில் வன்முறை கலாசாரத்தை அனுமதிக்கமாட்டோம். அமைதிப்பூங்கா என்று பெயரெடுத்த தமிழகத்தை, வெடிகுண்டு கலவர கலாசாரத்துக்கு மாற்ற முயல்வோரை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, சட்டம்-ஒழுங்கையும், அமைதியையும் தமிழக அரசும், காவல்துறையும் பாதுகாக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.