பஸ்நிலையங்களில் பராமரிப்பற்ற நிலையில் தாய்மார்கள் பாலூட்டும் அறை
பஸ்நிலையங்களில் பராமரிப்பற்ற நிலையில் தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளது.
பயணம் மற்றும் பணி நிமித்தமாக பாலூட்டும் தாய்மார்கள் வெளியே செல்லும்போது, பஸ்நிலையங்களில் சில மணி நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. அப்படி காத்திருக்கும் வேளைகளில் குழந்தைகளுக்கு தனிமையில் பாலூட்டுவதற்கு வசதியாக பஸ் நிலையங்களில் பாலூட்டும் அறை அமைக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.
தனி அறை
இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது பஸ் நிலையங்களில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட தனியாக மையங்கள் அமைக்குமாறு உத்தரவிட்டார்.
அதன்பேரில், அதற்கு அடுத்த மாதமே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்களில் தனி அறைகள் திறக்கப்பட்டன. இந்த தனி அறைகளில் சுத்தமான குடிநீர் வசதி, குழந்தைகளுக்கு உடைமாற்றுவதற்கு வசதி என சகல வசதிகளும் இருந்தன. இந்த அறைகளை பராமரிப்பதற்காக ஊழியர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
அனைத்து பஸ்நிலையங்களிலும் இந்த பாலூட்டும் மையங்கள் அமைக்கும் பொறுப்பு நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருத்தங்கல் ஆகிய ஊர்களில் உள்ள நகராட்சி பஸ் நிலையங்களில் பாலூட்டும் மையங்கள் அமைக்கப்பட்டன.
இதற்கு ரூ. 1.6 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நகராட்சி நிர்வாகம் இந்த மையங்களை முறையாக பராமரிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மையம் செல்ல தவிர்ப்பு
ஆனால் பெரும்பாலான பஸ் நிலையங்களில் இந்த மையங்கள் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் தாய்மார்கள் அதனை பயன்படுத்த வாய்ப்பு இல்லாத நிலையும் ஏற்பட்டது. அதிலும் இடையில் சில காலம் இந்த மையங்களில் நகராட்சி நிர்வாகம் பொருட்கள் வைப்பறையாக பயன்படுத்தும் நிலையும் ஏற்பட்டது. தற்போதைய நிலையில் விருதுநகரில் இந்த மையத்தில் 2 இருக்கைகள் மட்டும் போடப்பட்டுள்ளன. காலையில் மையம் திறக்கப்பட்டு மாலையில் பூட்டப்படுவதாக கூறப்படுகிறது.
விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையம் பஸ் நிலையத்தின் தெற்கு பகுதியில் ஒரு ஓரமாக அமைக்கப்பட்டுள்ளது. பஸ் பயணத்திற்காக குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் இந்த மையத்திற்குள் சென்றால் செல்ல வேண்டிய பஸ்சை விட்டுவிடக்கூடாது என்ற அச்சத்திலேயே குழந்தைகள் கதறினாலும் பரவாயில்லை என பாலூட்டும் மையத்திற்கு செல்வதை தவிர்க்க தொடங்கி விட்டனர். ஆதலால் அனைத்து அடிப்படை வசதிகளுடன் மீண்டும் பாலூட்டும் அறை செயல்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பாதுகாப்பு இல்லை
இதுகுறித்து பெண்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
ராஜபாளையம் மைதிலி:- ராஜபாளையம் பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை எந்தநேரமும் பூட்டியே கிடக்கின்றது. இதனால் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது மிகுந்த சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது. கைக்குழந்தைகளை வைத்துள்ளவர்கள் சற்று ஓய்வெடுக்க முடியாமல் திணறி வருகிறோம். அதோடு மட்டுமின்றி அறை திறந்து இருந்தாலும் எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.தாயில்பட்டி பாரதிநகர் செல்வகுமாரி:-
தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் ஒரு சில இடங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. மழை நீர் அறைக்குள் வருவதை தடுக்க வேண்டும்.
பூட்டிக்கிடக்கும் அறை
வத்திராயிருப்பை சேர்ந்த லீலாவதி:-
தமிழகத்தில் ஒவ்வொரு பஸ் நிலையத்திலும் தாய்மார்களின் நலனை கருத்தில் கொண்டு பாலூட்டும் அறைகள் திறக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த அறை என்பது தற்போது பராமரிப்பு இன்றி பாழடைந்து கிடக்கிறது. இதனால் கைக்குழந்தைகளுடன் வரக்கூடிய பாலூட்டும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பசியினை போக்குவதற்கு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். ஆதலால் பூட்டிக்கிடக்கும், பராமரிப்பின்றி உள்ள பாலூட்டும் அறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடைந்த நாற்காலிகள்
அருப்புக்கோட்ைட நெசவாளர் காலனி சுதா:-
அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் அமைக்கப்பட்டுள்ள அறையில் தாய்மார்கள் உட்காரும் நாற்காலிகள் சேதமாகி உள்ளது. இதனால் தாய்மார்கள் தரையில் அமர்ந்து பாலூட்டும் சூழ்நிலை உள்ளது. தற்போது அறை சுத்தம் செய்யப்படாமல் காணப்படுகிறது. பாலூட்டும் அறையில் சேதமடைந்த நாற்காலிகளை சரி செய்து சுத்தமாக வைக்க வேண்டும்.