சென்டிரல் ரெயில் நிலையத்தில் கணக்கில் வராத ரூ.37 லட்சம் பறிமுதல்


சென்டிரல் ரெயில் நிலையத்தில் கணக்கில் வராத ரூ.37 லட்சம் பறிமுதல்
x

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.37 லட்சத்தை பறிமுதல் செய்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், இது தொடர்பாக 2 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

சென்னை

சென்னை,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நடைமேடை 3-ல் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

இதனால் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், கட்டுக்கட்டுகாக ரூ.25 லட்சம் இருந்தது கண்டறியப்பட்டது. அவரை ஆர்.பி.எப். அலுவலகத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர், பெங்களூருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 53) என்பதும், சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தங்க நகை வியாபாரி ஒருவரிடம் அந்த பணத்தை ஒப்படைக்க வந்ததும் தெரியவந்தது.

இதேபோல நேற்று காலை ஐதராபாத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணிகளின் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, பார்சல் அலுவலகம் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரின் பையை பரிசோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக ரூ.11 லட்சத்து 98 ஆயிரம் இருந்தது. விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த மாடவாசு (42) என்பது தெரிந்தது.

ஆனால் இவர்கள் 2 பேரிடமும் அந்த பணத்துக்கு உண்டான எந்தவித ஆவணங்களும் இல்லை. இதையடுத்து, சென்டிரல் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவணேசன் 2 பேரிடமிருந்தும் ரூ.36 லட்சத்து 98 ஆயிரத்தை பறிமுதல் செய்து, இருவரையும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து 2 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகின்றது.


Next Story