உலகம்பட்டி நம்பையா கோவில் மாட்டு பொங்கல் விழா


உலகம்பட்டி நம்பையா கோவில் மாட்டு பொங்கல் விழா
x

எஸ்.புதூர் அருகே உள்ள உலகம்பட்டியில் உள்ள நம்பையா கோவிலில் மாட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே உள்ள உலகம்பட்டியில் உள்ள நம்பையா கோவிலில் மாட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாட்டு பொங்கல்

எஸ்.புதூர் அருகே உள்ள உலகம்பட்டி கிராமம் சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கொண்டாடப்படும் மாட்டுப்பொங்கல் ஆனது மற்ற ஊர்களில் கொண்டாடப்படும் மாட்டுப்பொங்கலை விட சற்று வித்தியாசமானது. விவசாயத்திற்கு பெரிதும் உதவிய கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விழா மாட்டுப்பொங்கல் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த கிராமத்தில் சற்று வித்தியாசமாக விவசாயத்திற்கு உதவிய கால்நடைகளுக்கும், விவசாயத்திற்கு உதவிய கருவிகளுக்கும், கிராமத்திற்கு காவல் அரணாக அமைந்துள்ள தெய்வத்திற்கும் நன்றி செலுத்தும் விழாவாகவும், ஊரின் ஒற்றுமைக்கான விழாவாகவும் கொண்டாடி வருகின்றனர் இவ்வூர் மக்கள்.

ஒற்றுமைக்கான விழா

இந்த கிராமத்தில் பலதரப்பட்ட மக்கள் பல பகுதிகளில் வசித்து வந்தாலும் ஒன்று கூடிய ஒரு ஒற்றுமைக்கான விழாவாக இந்த மாட்டுப்பொங்கலை கொண்டாடி வருகின்றனர். இந்த ஊரைச் சேர்ந்த மக்கள் எந்த பகுதியில் வசித்து வந்தாலும் மாட்டுப்பொங்கல் அன்று கண்டிப்பாக உலகம்பட்டியில் அமைந்துள்ள நம்பையா கோவிலுக்கு பொங்கல் வைக்க வந்துவிடுவர். ஆண்டுதோறும் இங்கு மாட்டுப்பொங்கல் அன்று பொங்கல் வைப்பது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான மாட்டுப்பொங்கல் விழா உலகம்பட்டியில் அமைந்துள்ள பல்வேறு கோவில் வீடுகளில் சாமி ஆட்டங்களுடன் நடைபெற்று, அந்தந்த கோவில் வீடுகளை சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து மொத்தமாக அலங்கரிக்கப்பட்ட கால்நடைகள் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்திய கருவிகளுடன் நம்பையா கோவிலை வந்தடைந்தனர்.

அங்கு தங்கள் விவசாயத்திற்கு பயன்படுத்திய பொருட்களை ஊருணியில் உள்ள நீரை கொண்டு சுத்தம் செய்து சாமி கும்பிட்டு வழிபட்டனர். பூசாரிகள் நாகப்பானையில் பொங்கல் வைத்தனர். நாகப்பானை பொங்கிய பிறகு பொதுமக்கள் ஊருணியில் இருந்து தண்ணீர் எடுத்து தங்கள் வயலில் விளைந்த பச்சரிசியை கொண்டும், வயல்களில் விளைந்த காய்கறிகளை கொண்டும் பொங்கல் வைத்தனர். அதனை தொடர்ந்து நம்பையா கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

வழிபாடு

பொங்கல் வைத்த பிறகு பொங்கலுடன், மஞ்சள் கலந்த நீரை வைத்து மக்கள் சாமி கும்பிட்டனர். பொதுமக்கள் வைத்த பொங்கலை சாமிக்கு மொத்தமாக படையல் வைத்து வழிபட்டனர்.

தங்களுக்கு பெரிதும் உதவிய கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் முதலில் கோவில் காளைக்கும், அதனை தொடர்ந்து ஊரில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் புனித நீரை பொங்கல் வைத்த பெண்கள் தெளிப்பர். ஊர் மக்கள் புனித நீரை தங்கள் கால்நடைகளுக்கு ஏற்றுக்கொண்டு கோவிலை வலம் வந்தனர். தன்னை நம்பியோரை கைவிடாத தெய்வம் உலகம்பட்டி நம்பையா கோவில் என்பதால் ஏராளமானோர் பொங்கலிட்டு வழிபட்டனர். இதை பார்க்க சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நூற்றாண்டிலும் பழமையும் மாறாமல், புதுமையும் விட்டுக்கொடுக்காமல் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பொங்கல் விழா சிறப்பானது.


Related Tags :
Next Story