இருசக்கர வாகன பேரணி: கன்னியாகுமரியில் "பூட்டு கதை" கூறிய உதயநிதி ஸ்டாலின்..!
இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ள 188 பேர் 188 வாகனங்களில் தமிழ்நாடு முழுவதும் பயணித்து சுமார் மூன்று லட்சம் பேரை சந்திக்க உள்ளனர்.
கன்னியாகுமரி,
திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு டிசம்பர் மாதம் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி இருசக்கர வாகன பேரணி இன்று தொடங்கியுள்ளது. இருசக்கர வாகன பேரணியை திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் இன்று தொடங்கி வைத்தார்.
8 ஆயிரத்து 647 கிலோமீட்டர் தூரம் மொத்தம் 13 நாட்கள் நடைபெறும் இந்த இருசக்கர வாகன பேரணி அடுத்த மாதம் சேலத்தில் நிறைவடைய உள்ளது. இந்த வாகன பேரணி 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வலம் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ள 188 பேர் 188 வாகனங்களில் தமிழ்நாடு முழுவதும் பயணித்து சுமார் மூன்று லட்சம் பேரை சந்திக்க உள்ளனர்.
இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு வரியாக தமிழக அரசு 25 ஆயிரம் கோடியை வழங்கி உள்ளது. ஆனால் தமிழக அரசுக்கு மத்திய அரசு திருப்பிக் கொடுத்தது வெறும் 2 ஆயிரம் கோடிதான். மாநிலத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறிக்கிறது மத்திய அரசு. மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். மாநில உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி நடைபெறும் மாநாட்டில் திரளான நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும்.
பைக் பிரசார பேரணியில் பங்கேற்பவர்கள் போர் வீரர்கள்போல் காட்சியளிக்கின்றனர். பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும். விதிமுறைகளை பின்பற்றி பயணத்தை மேற்கொள்ளுங்கள். உங்களது குடும்பத்தினர் உங்களுக்காக காத்திருக்கிறார்கள். நான் சேலத்தில் உங்களுக்காக காத்திருப்பேன். இந்த பயணம் வெற்றிப் பயணமாக அமைய வேண்டும். இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ள 188 பேரும் தமிழக முழுவதும் மூன்று லட்சம் பேரை சந்திக்க உள்ளீர்கள். நீங்கள் பொதுமக்களிடம் திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லுங்கள். நீட் தேர்வின் அவல நிலையை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்றார்.
மேலும் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குட்டிக் கதை ஒன்றையும் கூறினார்.
"ஒரு பூட்டு, சுத்தியல், சாவி இருந்தது. பூட்டின் தலையில் சுத்தியல் தட்டி தட்டி திறக்க முயற்சித்தது. ஆனால் பூட்டை திறக்க முடியவில்லை. சாவி சுலபமாக பூட்டை திறந்து விட்டது. இதை பார்த்த சுத்தியல் சாவியிடம் கேட்டது. நான் பலமாக இருக்கிறேன். பலமுறை பூட்டின் தலையில் அடித்தும் திறக்கவில்லை. நீ எளிதாக எப்படி திறந்தாய் என்று கேட்டது.
அதற்கு சாவி, நான் பூட்டின் இதயத்தை நேரடியாக தொட்டு விட்டேன் என்றது. இதில் பூட்டு என்பது தமிழ்நாடு, சாவி என்பது நமது திராவிட இயக்கம். சுத்தியல் என்பது மத்திய அரசு. மத்திய அரசு தமிழ்நாட்டுக்குள் ஒவ்வொன்றையும் திணிக்க இடியாக இடிக்கிறது. என்னதான் திணித்தாலும் தமிழகத்திற்குள் நுழைய முடியாது." என உதயநிதி தெரிவித்தார்.