வணிகவரி அலுவலர்கள் 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை
லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான தஞ்சை வணிகவரி அலுவலர்கள் 4 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
தஞ்சாவூர்;
லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான தஞ்சை வணிகவரி அலுவலர்கள் 4 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
வணிக வரி அலுவலர்கள்
தஞ்சையை அடுத்த வல்லம் பிலோமினா நகரில் தனியார் கெமிக்கல் நிறுவனத்தை நடத்தி வந்தவர் குணசேகர். இவரிடம் கடந்த 2003-ம் ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதி தஞ்சை வணிக வரி அலுவலர்கள் 6 பேர் விசாரணை நடத்தினர்.அப்போது உங்கள் மீது புகார் வந்துள்ளது. வரியை குறைத்து செலுத்தி கொள்ள ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும், பின்னர் ஒவ்வொருவருக்கும் ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.12 ஆயிரம் லஞ்சம் அளிக்க வேண்டும் என்றும் குணசேகரிடம் அலுவலர்கள் கூறினர்.
5 பேர் கைது
லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் நாளை திரும்பவும் வந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரி போடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத குணசேகர் இதுகுறித்து தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து லஞ்சம் வாங்கியபோது வணிக வரி அலுவலர்கள் கருணாகரன், சிங்காரவேலு, மகாலட்சுமி, முத்துகிருஷ்ணன், அலுவலக உதவியாளர் சுரேஷ் ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
2 ஆண்டுகள் சிறை
பின்னர் அவர்களை கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை மற்றும் சிறப்பு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை நீதிபதி சண்முகபிரியா விசாரித்து கருணாகரன், சிங்காரவேலு, மகாலட்சுமி, முத்துகிருஷ்ணன், சுரேஷ் ஆகியோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இவர்களில் சிங்காரவேலு ஏற்கனவே இறந்துவிட்டார்.