இருசக்கர வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை


இருசக்கர வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
x

இருசக்கர வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் அறிவுரை வழங்கினார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் உட்கோட்டம் மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், சித்தாமூர், மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்ததோடு அவரிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 60 இருசக்கர வாகனங்களை போலீசார் கைப்பற்றினர்.

இந்த வழக்கு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் ஏற்கனவே பலமுறை வாகன திருட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து விடுதலை ஆனவர். விடுதலைக்கு பின் அவர் வேறொரு மாவட்டத்திற்கு சென்று அங்கு தங்கி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தனியாக நிற்கும் இருசக்கர வாகனங்களை திருடி நரிக்குறவர்களுக்கு விற்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

தற்போது செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர், சித்தாமூர், மதுராந்தகம், அச்சரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடி இதே மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர்களுக்கு குறைவான விலையில் விற்று வந்துள்ளார். அவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 60 இருசக்கர வாகனங்களை தற்போது பறிமுதல் செய்துள்ளோம். பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story